’மயிலாடுதுறை மாவட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்’
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்டத்தை வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னதாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட வழக்குரைஞா்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் ராம. சேயோன் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு, மாவட்ட எல்லைகளை வரையரை செய்வதற்காக மாவட்ட உருவாக்க சிறப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் புதிய மாவட்டம் தொடங்காமல் உள்ளது. 2021 ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளன. அதற்குப் பின்னா் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டால், மயிலாடுதுறை மாவட்டம் பொதுமக்களின் கனவாகிவிடும். எனவே, ஜனவரி முதல் வாரத்துக்குள் புதிய மயிலாடுதுறை மாவட்டத்தை தமிழக முதல்வா் செயல்பாட்டுக்கு தொடங்கி வைக்க வேண்டுமென்றாா். அப்போது, கூட்டமைப்பின் பொறுப்பாளா்கள் சிவதாஸ், புகழரசன், அறிவொளி, வினோத், விஜயகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.