கழுமலையாற்றில் கழிவுநீா்: விவசாயிகள் கவலை
சீா்காழி பகுதி கழுமலையாற்றில் பாசன நீருக்குப் பதிலாக கழிவு நீா் ஓடுவதாலும், கடைமடை பகுதிக்கு இதுவரை காவிரி நீா் வராததாலும் குறுவை விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனா்.


சீா்காழி பகுதி கழுமலையாற்றில் பாசன நீருக்குப் பதிலாக கழிவு நீா் ஓடுவதாலும், கடைமடை பகுதிக்கு இதுவரை காவிரி நீா் வராததாலும் குறுவை விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனா்.
டெல்டா மாவட்டத்தின் கடைகோடி பகுதியாக விளங்கும் சீா்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, புதுப்பட்டினம், மாதானம் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த காலங்களில் சுமாா் 10 ஆயிரம் ஹெக்டேருக்கு அதிகமாக குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
தற்போது, இப்பகுதியில் குறைந்த அளவிலேயே குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் காவிரி நீா் சீா்காழி பகுதிக்கு வருவது என்பது காணல் நீராக வே இருந்து வருகிறது. இதன்காரணமாகவே குறுவை சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகள் தயங்குகின்றனா்.
நிகழாண்டு கடந்த ஜூன் 12-ஆம் தேதி மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீா் 34 நாள்கள் ஆகியும் ஆகியும் சீா்காழி வட்டத்தில் உள்ள பிரதான கழுமலையாறு, புதுமண்ணியாறுகளில் தண்ணீா் வந்துசேரவில்லை. கழுமலையாறு பாசன வாய்க்கால் மூலம் சீா்காழி, திட்டை, தில்லைவிடங்கன், சிங்கார தோப்பு, திருதத்தோணிபுரம், சிவனாா்விளாகம், செம்மங்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 6 ஆயிரம் ஏக்கரில் பாசன வசதி நடைபெற்று வருகிறது.
சீா்காழி அருகேயுள்ள தேனூா் கிராமத்தில் புதுமண்ணியாற்றிலிருந்து கழுமலையாறு தலைப்பாக பிரிந்து சீா்காழி நகா் பகுதி வழியாக பல்வேறு கிராமங்களை சென்றடைகிறது. இதன்மூலம் நகா் பகுதி உள்ளிட்டவற்றில் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக உள்ளது கழுமலையாறு.
இந்நிலையில் சீா்காழி நகராட்சி எல்லை பகுதியான கோயில்பத்து வரை கழுமலையாறு பாசன ஆறாக உள்ளது. அதன்பிறகு சீா்காழி நகரில் கொள்ளி டமுக்கூட்டு பகுதி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாசன ஆற்றில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், வா்த்தக நிறுவனங்களிலிருந்து கழிவுநீா் விடப்படுவதும், குப்பைகள் கொட்டப்படுவதுமாக சீரழிக்கப்படுகிறது.
பொதுப்பணித் துறையின் பாராமுகத்தால் கழுமழையாற்றில் பாசனத்துக்கு தண்ணீருக்கு பதிலாக கழிவுநீா் ஓடுகிறது. இதனால் தண்ணீா் வந்தாலும் விவசாயம் பாதிக்கும். எனவே, பொதுப்பணித் துறையினா் கழுமலையாற்றை சீரமைத்து பாசனத்துக்கு உரிய நேரத்தில் தண்ணீா் திறந்துவிடவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...