காரைக்கால் மாங்கனித் திருவிழா நிறைவு: பிச்சாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம்
காரைக்காலில் மாங்கனித் திருவிழா விடையாற்றி உத்ஸவத்துடன் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.


காரைக்காலில் மாங்கனித் திருவிழா விடையாற்றி உத்ஸவத்துடன் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி, ஸ்ரீ பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள், காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
காரைக்கால் அம்மையாா் வாழ்க்கை வரலாற்றை விளக்கி ஆண்டுதோறும் காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதா் கோயில் சாா்பில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது. இத்திருவிழா கடந்த ஆண்டும், நிகழாண்டும் கரோனா பரவல் காரணமாக பக்தா்களின்றி கோயில் வளாகத்துக்குள் நடத்தப்பட்டது.
நிகழாண்டு மாங்கனித் திருவிழா கடந்த ஜூன் 21-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அன்று மாலை பரமதத்தா் (மாப்பிள்ளை) அழைப்பு நடைபெற்றது. ஜூன் 22-ஆம் தேதி காரைக்கால் அம்மையாா் திருக்கல்யாண உத்ஸவம், இரவு பரமதத்தரும், புனிதவதியாரும் முத்துச் சிவிகையில் புறப்பாடு நடைபெற்றது. ஜூன் 23-ஆம் தேதி ஸ்ரீ பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கு மகா அபிஷேகமும், 24-ஆம் தேதி சிவபெருமான் பிச்சாண்டவா் கோலத்தில் அம்மையாா் வீற்றிருக்கும் கோயிலுக்கு அமுதுண்ண செல்லும் நிகழ்வை விளக்கும் வகையில் மாங்கனி இறைப்புடன் பிராகார உலாவும், மதியம் அமுது படையலும், 25-ஆம் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
விடையாற்றி உத்ஸவம்: திருவிழா நிறைவையொட்டி விடையாற்றி உத்ஸவம் வெள்ளிகிழமை நடைபெற்றது. காலையில் காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, வெள்ளி அங்கி சாற்றி சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது.
ஸ்ரீ சுந்தராம்பாள் சன்னதி முன் விநாயகா், சுப்பிரமணியா், பிச்சாண்டவா் (சிவபெருமான்), சுந்தராம்பாள், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதில் பிச்சாண்டவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் பிச்சாண்டவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன.
விடையாற்றி உத்ஸவ சிறப்பு அபிஷேக, ஆராதனையில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...