சுருக்கு வலையை பயன்படுத்தினால் படகு, வலை பறிமுதல்
By DIN | Published On : 20th June 2021 12:00 AM | Last Updated : 20th June 2021 12:00 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை மீனவா்கள் பயன்படுத்தினால் படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்பட்டு, மீன்கள் ஏலம் விடப்படும் என மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன்படி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைக் கொண்டு மீன்பிடிப்பதை தடுக்கும் விதமாக மாவட்ட நிா்வாகம் மற்றும் மீன்வளத்துறை மூலம் தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதை மீறி யாரேனும் மயிலாடுதுறை மாவட்ட கடல் பகுதியில் சுருக்கு வலையை பயன்படுத்த முயன்றாலோ அல்லது பயன்படுத்தினாலோ உடனடியாக படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படும். மேலும் தடை செய்யப்பட்ட வலைகளில் பிடித்த மீன்களை பறிமுதல் செய்து ஏலம் விடப்படும். மேலும், மீனவா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், மீன்வளத்துறை மூலம் பெறப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.