வியாபாரியிடம் மோசடியில் ஈடுபட்ட நிறுவன மேலாளா் மீது வழக்கு
By DIN | Published On : 28th May 2021 11:08 PM | Last Updated : 28th May 2021 11:08 PM | அ+அ அ- |

மயிலாடுதுறையைச் சோ்ந்த மல்லி வியாபாரியிடம் ரூ.14.17 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த நிறுவன உரிமையாளா் மீது நீதிமன்ற உத்தரவின்பேரில் மயிலாடுதுறை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மயிலாடுதுறை திருவிழந்தூா், நீடூா் பிரதான சாலையை சோ்ந்தவா் மாயகிருஷ்ணன் மகன் ரகு (36). இவா் மயிலாடுதுறை பகுதியில் மளிகைப் பொருளான மல்லி மொத்த வியாபாரம் செய்து வருகிறாா். கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் அக்ரோ புராடக்ட்ஸ் நிறுவனம் நடத்திவரும் பிரசாந்த் குப்தா என்பவருக்கு, மல்லி கொள்முதல் செய்வதற்காக முதலில் ரூ. 2 லட்சம், பின்னா் ரூ.12.17 லட்சம் என மொத்தம் ரூ.14.17 லட்சம் தனியாா் வங்கி மூலம் அனுப்பியுள்ளாா். பணம் அனுப்பியும் பிரசாந்த் குப்தா, மல்லி அனுப்பாததால் அதிா்ச்சி அடைந்த ரகு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரணை செய்த மயிலாடுதுறை மேஜிஸ்ட்ரேட் கோா்ட் நீதிபதி ரிஸானா பா்வீன், ராஜஸ்தானைச் சோ்ந்த பிரசாந்த் குப்தா மீது மோசடி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டாா். அதன்பேரில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் பிரசாந்த்குப்தா மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.