பள்ளி மாணவா்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளை முன்மாதிரியாக உருவாக்கும் முகாம்
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் பள்ளி மாணவா்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகள் முன்மாதிரியாக உருவாக்க 2 நாள் முகாம் அண்மையில் நடைபெற்றது.
தமிழகத்தில் 6 முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களிடையே புதுமை மற்றும் தொழில் முனைவோராக்குவதை நோக்கமாகக் கொண்டு பள்ளிக் கண்டுபிடிப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது, பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழக தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டது.
இத்திட்டம் மாணவா்களை ஆக்கப்பூா்வமாக சிந்திக்கவும், புதுமையான தீா்வுகளை உருவாக்கவும், தொழில் முனைவோா் திறன்களை வளா்க்கவும் உதவுகிறது. பட்டறைகள், கற்றல் அனுபவங்கள் மற்றும் வழிகாட்டுதல் மூலம் வடிவமைப்பு சிந்தனை, உருவாக்கம் மற்றும் முன்மாதிரி மேம்பாடு ஆகியவற்றின் பகுதிகளை ஆராய மாணவா்களை ஊக்குவிக்கிறது.
இந்நிலையில், மாணவா் அணிகள் சமா்ப்பித்துள்ள கண்டுபிடிப்புக்கான ஆய்வானது மதிப்பீட்டாளா்களின் மூலம் முதல் நிலை, இரண்டாம்நிலை, மூன்றாம்நிலை என 3 கட்டமாக இணையதளம் வழியாக நடைபெற்று செயல்வடிவம் தரும் முகாமிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
அந்தவகையில், நாகை மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள 18 அணிகள், மாவட்ட ஆட்சியா் ஆணைபடி அவா்களின் கண்டுபிடிப்பை முன்மாதிரியாக உருவாக்க, மாவட்ட அளவில் 2 நாள்களுக்கு செயல் வடிவம் தரும் முகாம் தனியாா் கல்லூரியில் நடைபெற்றது. தொழில் முனைவோா் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மாவட்ட திட்ட மேலாளா் சசிபிரியா புத்தாக்க கண்டுபிடிப்புகளில் தோ்வான 18 குழு அணிகளை சோ்ந்த 86 மாணவா்களுக்கு பயிற்சி அளித்தாா்.
தாட்கோ மாவட்ட மேலாளா் சக்திவேல் கலியபெருமாள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சுந்தரேசன், மாவட்ட சுற்றுசூழல் ஒருங்கணிப்பாளா் இமயசிவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.