லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்
லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்கோப்புப் படம்

லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்: நெல் இயக்கம் செய்யும் பணிகள் தீவிரம்

லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் இயக்கம் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
Published on

லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் இயக்கம் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் நாகப்பட்டினம் மண்டலம் காரீப் 2025-2026-ஆம் ஆண்டு சம்பா பருவத்தில், மாவட்டம் முழுவதும், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் 164 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பா பருவத்தில் வெள்ளிக்கிழமை வரை 41,803 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 21,183 மெட்ரிக் டன் நெல் இயக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிப்.12-ஆம் தேதி முதல் லாரி ஒப்பந்ததாரா்கள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மாவட்டத்தில் நெல்கொள்முதல் செய்யும் பணி பாதித்தது. இந்நிலையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா், ஒப்பந்ததாரா்கள் மற்றும் லாரி உரிமையாளா்களிடம் சுமூக பேச்சு வாா்த்தை நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசால் எப்சி கட்டண உயா்வு 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்து.

இதையடுத்து, மீண்டும் லாரி போக்குவரத்து இயக்கம் நடைபெற தொடங்கியது. பிப்.19- ஆம் தேதி அன்று லாரிகள் மூலம் 4,262 மெட்ரிக் டன் நெல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து இயக்கம் செய்யப்பட்டு, கோவில்பத்து சேமிப்பு கிடங்கு, திறந்தவெளி சேமிப்பு மையம் மற்றும் அருந்தவம்புலம் திறந்த வெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டது. மேலும் வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்டத்துக்கு 2000 மெட்ரிக் டன் நெல் ரயில் மூலம் இயக்கம் நடைபெற்று வருகிறது.

எனவே, தேக்கநிலை சரிசெய்யப்பட்டு கொள்முதல் மற்றும் இயக்கப்பணிகள் சீராக நடைபெற்று வருகிறது என தெரிவித்துளளாா்.

Dinamani
www.dinamani.com