ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காரைக்கால் நகரப் பகுதியில் சாக்கடையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை நகராட்சி நிர்வாகத்தினர் வியாழக்கிழமை அகற்றினர்.
Updated on
1 min read

காரைக்கால் நகரப் பகுதியில் சாக்கடையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை நகராட்சி நிர்வாகத்தினர் வியாழக்கிழமை அகற்றினர்.
காரைக்கால் தோமாஸ் அருள் தெருவில் புதைச் சாக்கடை உள்ளது. நகரிலிருந்து வெளியேறு கழிவு நீர் தோமாஸ் அருள் தெரு வழியாக கடற்கரையை நோக்கி செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. திறந்த நிலையிலும், மூடப்பட்ட நிலையிலும் உள்ள சாக்கடை ஓரத்தில் வீடுகள் உள்ளன. ரயில் நிலையத்துக்கு செல்லும் வழியில் குறிப்பிட்ட தூரத்தில் சாக்கடையை ஆக்கிரமித்து காய்கறி, கோழி, இறைச்சி உள்ளிட்ட பல்வேறு வணிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில் புதைச் சாக்கடை சிமென்ட் கட்டையால் மூடப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், நகராட்சியால் சுத்தம் செய்ய முடியவில்லை. மேலும் இறைச்சிக் கழிவுகளை சாக்கடையில் விடுவதால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடுகள் உருவாகிறது என்று பொது மக்கள் நகராட்சியிடம் புகார் தெரிவித்திருந்தனர். அதன்படி, நகராட்சி சார்பில்  சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டும், குறித்த காலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளாததால் நகராட்சி ஆணையர் டி. சுதாகர் தலைமையில் நகராட்சி செயற்பொறியாளர் ராமதாஸ் உள்ளிட்ட ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
ஆக்கிரமித்தவர்கள் நிரந்தர நிலையில் கட்டுமானங்களை செய்திருந்ததால், பிற்பகல் 3 மணி வரை தாங்களாக அகற்றிக்கொள்ள கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொண்டதன் பேரில் நகராட்சி நிர்வாகம் அனுமதியளித்தது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மாவட்ட சார்பு ஆட்சியர் ஏ. விக்ராந்த் ராஜா ஆய்வு செய்தார்.  இதுகுறித்து நகராட்சி ஆணையர் டி. சுதாகர் கூறியது: இப்பகுதியில் ஆக்கிரமிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பொது மக்கள் புகார் கூறினர். அதன்பிறகு,  நகராட்சியால் துப்புரவுப் பணி மேற்கொள்ள முடியாததை உணர்ந்தோம். ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசம் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நகரில் மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்கள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இதைத் தொடர்ந்து திருநள்ளாறு சாலையில் பழைய நேரு மார்க்கெட் வளாக நுழைவு வாயிலில் நடத்திவந்த சிறு கடைகள் அகற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com