உளுந்து, பயறு விதை மானியத்தில் தருவதற்கு வேளாண் துறை நடவடிக்கை எடுக்கவில்லை: பாமக புகார்

காரைக்காலில் நெல் அறுவடைக்குப் பின் பயிரிட வேண்டிய உளுந்து, பயறு விதைகளை மானியத்தில் தருவதற்கான நடவடிக்கையை, வேளாண் துறை இதுவரை எடுக்கவில்லை என பாமக கண்டனம் தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

காரைக்காலில் நெல் அறுவடைக்குப் பின் பயிரிட வேண்டிய உளுந்து, பயறு விதைகளை மானியத்தில் தருவதற்கான நடவடிக்கையை, வேளாண் துறை இதுவரை எடுக்கவில்லை என பாமக கண்டனம் தெரிவித்துள்ளது.
காரைக்கால் மாவட்ட பாமக செயலர் க.தேவமணி திங்கள்கிழமை கூறியது :  காரைக்காலில் கடந்த 2016-ஆம் ஆண்டு காவிரி நீர் வராததால் வறட்சி மாவட்டமாக அறிவிப்பு செய்யப்பட்டது. 2017-ஆம் ஆண்டும் அதே நிலை என்றாலும், ஆழ்குழாய் பாசனம், மழை ஆகியவற்றைப் பயன்படுத்தி, கடுமையாக போராடி விவசாயம் செய்தனர். 2017-18-ஆம் ஆண்டுக்கான ஊக்கத் தொகை தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விவசாயிகளை ஊக்குவிக்க தரப்படும் இந்த திட்ட உதவியை காலத்தோடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
கடந்த ஆண்டு சம்பா பருவ விவசாயம் தொடங்கியது முதல் அறுவடைப் பருவமான தற்போது வரை வேளாண் நிறுவனமான பாசிக்கில், விவசாயிகளுக்கான இடுபொருள், உரம், பூச்சி மருந்துகள் தரப்படவில்லை. ஆங்காங்கே நெல் அறுவடை நடைபெற்றும் வரும் நிலையில், இதற்கு அடுத்ததாக உளுந்து, பயறு ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட தயாராவர். ஆனால் இதுவரை அதற்கான விதை மானியத்தில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை.
கடந்த ஆண்டு கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இதற்கான தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு இதுவரை தரப்படாததால், புதிதாக கடன் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு புதுச்சேரி அரசின் வேளாண் துறையின் செயல்பாடுகள் மந்தகதியில் இருக்கும்போது, காரைக்காலில் ரூ.40 லட்சம் செலவில் மலர்க் கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் நடத்தப்படுகிறது. தோட்டக்கலை ஆர்வலர்களுக்கானது என கூறப்படும் மலர் கண்காட்சியில் பல்வேறு செடிகள் மானியத்தில் தரப்படும். இதனை பராமரிக்க உரிய தண்ணீர் காரைக்காலில் இல்லை. நல்லம்பல் ஏரியும் விவசாயிக்கும் பயன்படாத வகையில், சுற்றுலாவினருக்கும் பயன்படாத வகையில் ரூ.5 கோடி செலவு செய்து பயனற்றுக்கிடக்கிறது. இதுபோன்ற நீர் நிலைகளை சீர்செய்து, பருவகால தண்ணீரை தேக்கிவைத்தால் மட்டுமே, காரைக்காலில் தோட்டப் பயிர் சாகுபடி சிறப்பாக இருக்கும். இவையெல்லாம் இல்லாதபோது, மலர்க் கண்காட்சி அவசியமற்றது.
புதுச்சேரி, காரைக்காலில் மட்டும் மலர்க் கண்காட்சிக்காக சுமார் ரூ.1.50 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசிக் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கலாம். புதுச்சேரியில் வேளாண் துறையின் செயல்பாடுகள் மிளிராமல், சுணக்கத்தில் இருப்பது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com