காரைக்கால் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள சுற்றுலாவினர் தங்கும் விடுதி ஆகஸ்ட் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகவும், இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினர் நிர்வகிக்க ஏற்பாடு செய்திருப்பதாக புதுச்சேரி சுற்றுலாத் துறை இயக்குநர் எல். முகம்மது மன்சூர் தெரிவித்தார்.
காரைக்காலில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்யும் வகையில் சனிக்கிழமை இரவு வந்த அவர், கடற்கரையில் சுற்றுலாத்துறை நிதியில் கட்டப்பட்டிருக்கும் சொகுசு தங்கும் விடுதிக் கட்டடத்தைப் பார்வையிட்டார். ஞாயிற்றுக்கிழமை திருநள்ளாறில் பேட்டை சாலையில் கட்டப்பட்டிருக்கும் பக்தர்கள் தங்கும் விடுதிக் கட்டடம், தீர்த்தக் கரை மேம்படுத்தும் பணி, ஆன்மிக பூங்கா அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டார்.
ஆய்வு குறித்து இயக்குநர் எல். முகம்மது மன்சூர் கூறியது : காரைக்கால் கடற்கரையில் சுற்றுலாத் துறை நிதியில் முதலாவதாக வணிக வளாகமாக கட்டி பின்னர் தங்கும் விடுதியாக மாற்றம் செய்யப்பட்டப் பணி முடிவுக்கு வந்துள்ளது. இந்த கட்டடத்துக்கு மின் வசதி, குடிநீர் வசதி செய்யும் பணிகள் தற்போது நடந்துவருகிறது.
இதில் 2 வி.ஐ.பி.க்கள் தங்கும் சூட் மற்றும் இரண்டடுக்கு வசதி கொண்ட குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட அறைகள் உள்ளன. இதனை யார் நிர்வகிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வந்த நிலையில், புதுச்சேரியில் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (ஐ.டி.டி.சி) சார்பில் நடத்தப்படும் அசோக் ஹோட்டல் அமைப்பினரிடமே வழங்க அரசு முடிவு செய்து ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் அந்த நிறுவனத்தினர் காரைக்கால் கடற்கரை தங்கும் விடுதியை நிர்வகிப்பார்கள். இதில் கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை அரசுக்கு அளிப்பார்கள். இந்த அமைப்பினர் மூலம் ஆகஸ்ட் மாதம் முதல் விடுதியை திறந்து பயன்படுத்த ஏற்பாடுகளை அரசு நிர்வாகம் செய்துவருகிறது.
அரசலாற்றில் உள்ள படகு குழாமை மேம்படுத்தவும், சுற்றுலாவினர் விரும்பும் வகையில் கூடுதலான படகுகளை கொண்டுவரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதோடு திருநள்ளாறு பகுதி நல்லம்பல் ஏரியிலும் தண்ணீர் நிரப்பி, படகுகள் சவாரி செய்ய ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.
திருநள்ளாறில் ரூ. 8 கோடி செலவில் ஆன்மிக பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வளாகத்தில் ஏற்கெனவே ஒரு குளம் உள்ளது. குளத்தை மேம்படுத்துவதோடு, இந்த வளாகம் முழுவதும் நவகிரகங்கள் குறித்ததாக அமைப்பு உருவாக்கப்படும். குறிப்பாக திருநள்ளாறு முதல் திருநாகேஸ்வரம் 50 கி.மீ. எனில், இரு கோயில்களின் கோபுரங்களை இடைவெளிவிட்டு வளாகத்தில் அமைக்கப்படும். இரு கோபுரங்களுக்கிடையே ஃபேவர் பிளாக் நடைபாதை அமைக்கப்படும். இதுபோன்று 9 நவகிரக தலங்கள் அமைப்பும் திருநள்ளாறை மையப்படுத்தி அமைக்கப்படும். மேலும் தியான மண்டபம், மின் விளக்குகள் அமைப்பு, சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெறுகிறது. இந்த திட்டப் பணி 2019 -ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவுபெறும்.
ஆன்மிக பூங்கா அருகே கோளரங்கம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுதவியில் கோளரங்கம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
திருநள்ளாறு பேட்டை சாலையில் 50 அறைகள் மற்றும் ரெஸ்ட்டாரண்ட் அமைப்புடன் கட்டப்பட்ட கட்டடத்தையும் ஐ.டி.டி.சி. மூலம் நிர்வகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருநள்ளாறு நளன் குளம் அருகே கட்டப்பட்ட கடைகள் மற்றும் குளத்துக்கு எதிரே கட்டப்பட்ட ரெஸ்ட்டாரண்ட், தகவல் மையம், தங்கும் விடுதி என்கிற ஒருங்கிணைந்த கட்டடத்தையும் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில், அடுத்த 10 நாள்களில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளது.
காரைக்கால் அம்மையார் குளத்துக்கு அருகே அய்யன் குளம் பகுதியில் ரூ. 4 கோடி திட்டத்தில் கலையரங்கம் உள்ளிட்ட ஆன்மிகம் சார்ந்த அமைப்புடன் மேம்படுத்தவும், கடற்கரை அலையாத்திக் காடு இருக்கும் 10 ஏக்கர் நிலப்பகுதியை பிச்சாவரம்போல மேம்படுத்தவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 3 கோடி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு திட்டப்பணிக்கும் நிதியுதவி செய்ய மத்திய அரசை புதுச்சேரி சுற்றுலாத்துறை அணுகவுள்ளது. இந்த நிதியையும் இந்த நிதியாண்டில் பெற்று திட்டப்பணிகள் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









