ககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

கடலோர பாதுகாப்பை உறுதி செய்ய ஒத்திகை

காரைக்காலில் சீ விஜில் -2019 என்கிற கடலோரப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலான ஒத்திகைப் பணியை போலீஸார் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

Updated On :23 ஜனவரி 2019, 5:42 am IST

காரைக்காலில் சீ விஜில் -2019 என்கிற கடலோரப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலான ஒத்திகைப் பணியை போலீஸார் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
மும்பையில் 2008 -ஆம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மத்திய அரசு, ஆபரேஷன் ஆம்லா, சாகர் கவாச் என்கிற பெயர்களில் ஒவ்வோர் ஆண்டும் பல கட்டங்களாக கடலோரப் பாதுகாப்பு  ஒத்திகை நிகழ்வை நடத்தி வருகிறது.
கடல் வழியாக கப்பலில் சிலரை கரையில் இறக்கிவிடுவதும், இவர்கள் முக்கியமான பகுதிகளில் தீவிரவாதிகள்போல் நுழைந்துகொள்வதும், உள்ளூர் போலீஸார் எம்மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்கின்றனர், எவ்வளவு நேரத்தில் மேற்கொள்கின்றனர், மக்களைக் காப்பாற்றக்கூடிய வகையில் போலீஸாரின் பணிகள் எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்ளும் பொருட்டு, இந்த ஒத்திகை நடத்தப்படுகிறது.
நிகழாண்டின் முதல்கட்டமாக  "சீ விஜில் -2019' என்கிற பெயரில் இந்த ஒத்திகை செவ்வாய்க்கிழமை காலை 6 முதல் புதன்கிழமை மாலை 6 மணி வரை நடத்தும் வகையில் காரைக்காலில் தொடங்கியுள்ளது.
இதன்படி, கடலோரக் காவல்நிலையத்தார் மற்றும் அனைத்து காவல்நிலைய அலுவலர்கள், காவலர்கள் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் காரைக்கால் பிராந்தியத்தில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளத் தொடங்கினர்.
வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் வீரவல்லவன் மேற்பார்வையில் கடற்கரை மற்றும் மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பை போலீஸார் மேற்கொண்டனர். மேலும், தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் மாரிமுத்து மேற்பார்வையில், போலீஸார் வாஞ்சூர் முதல் கருக்களாச்சேரி வரையிலான கடலோரப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அம்மன்கோயில்பத்து முதல் மண்டபத்தூர் வரையிலான கடலோரக் கிராமங்கள், கரையோரப் பகுதியிலும் போலீஸார் தீவிரமான கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர். காரைக்கால் தனியார் துறைமுகம், பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பு குறித்தும், அடையாளம் தெரியாதவர்கள் வருகை குறித்தும் போலீஸார் கேட்டறிந்தனர். ஒவ்வொரு காவல் சரகத்துக்குள்பட்ட எல்லையில் போலீஸார் தீவிர வாகனச் சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர். பூவம் மற்றும் வாஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையின் காரைக்கால் எல்லைப் பகுதிகளில் தீவிரமான கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக போலீஸாரிடம் விசாரணை: இதனிடையே, காரைக்கால் மார்க் துறைமுகம் அருகே போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, 5 பேர் அந்த பகுதியில் ஊடுருவ முயன்றனர்.
அவர்களைக் கடலோரக் காவல்படையினரும், திருப்பட்டினம் போலீஸாரும் பிடித்து விசாரித்தபோது, ஒத்திகை நிகழ்வுக்காக அனுப்பப்பட்ட தமிழக காவல்துறையின் ரெட் ஃபோர்ஸ் குழுவினர் என அவர்கள் தெரிவித்தனர். இவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று கூடுதல் விசாரணை செய்து, போலீஸார் உறுதிப்படுத்திக்கொண்டு விடுவித்தனர்.
திருநள்ளாறு கோயிலில் தீவிர சோதனை : திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் வழக்கமாக பக்தர்களிடம் சோதனை நடத்தப்படுகிறது. ஒத்திகையையொட்டி கூடுதலான போலீஸார், கோயில் பிரதான வாயிலில் இருந்து கோயிலுக்குள் நுழைவோரை சோதித்தும், விசாரணையும் நடத்தி அனுமதிக்கின்றனர்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தினர் கூறும்போது, புதன்கிழமை மாலை 6 மணி வரை சீ விஜில் என்கிற கடல் பாதுகாப்பு ஒத்திகை நிறைவடைகிறது. இந்த நாள்களில் கண்காணிப்புப் பணிகள்  தீவிரமாக இருக்கும். மேலும், காரைக்கால் பகுதியில் உள்ள கப்பல் துறைமுகம், மீன்பிடித் துறைமுகம், ஓ.என்.ஜி.டி, பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள், திருநள்ளாறு கோயில், காரைக்கால் அம்மையார் கோயில் உள்ளிட்டவற்றிலும் பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு, தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.