காரைக்காலில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காரைக்கால் கடற்கரை சாலையில் (தங்கும் விடுதி எதிரில்) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், குடியரசு தின கொடியேற்றும் நிகழ்ச்சி வரும் 26 -ஆம் தேதி நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ஏ. விக்ரந்த் ராஜா காலை 9.05 மணிக்கு தேசியக் கொடியேற்றிவைத்து, போலீஸார் அணிவகுப்பை பார்வையிட்டு பல்வேறு தரப்பினருக்கு பரிசுகள் வழங்கவுள்ளார்.
பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதற்காக கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக போலீஸாருக்கு பயிற்சி நடைபெற்று வருகிறது. இதேபோல், பள்ளி மாணவ, மாணவியர்கள் கடற்கரை சாலைக்கு தினமும் பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டு, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நிகழ்ச்சி நடைபெறுமிடத்தில் பந்தல் அமைப்புப் பணியை அரசு நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர். பொதுமக்கள் திரளாக பங்கேற்கும் வகையில் இருக்கை அமைத்தல், மின்சார வசதி, பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
அன்று மாலையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரசு விடுதி அருகே வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், அரசுத் துறையினர், ஓய்வுபெற்ற அரசுத்துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், சமாதானக் குழு உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொள்வர். இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடற்கரை சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க விரும்புவோர், 26 -ஆம் தேதி காலை 8.30 மணிக்கு முன்னதாக இருக்கைக்கு வந்துவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








