தேவையான விதை, உரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்

காரைக்காலில் சம்பா, தாளடிக்குத் தேவையான விதை மற்றும் உரங்களை தயாா்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறு அரசுத்துறையினருக்கு அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் அறிவுறுத்தினாா்.
அரசுத்துறையினா், விவசாயிகள் பங்கேற்ற கூட்டத்தில் கருத்துகளைக் கேட்டறியும் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.
அரசுத்துறையினா், விவசாயிகள் பங்கேற்ற கூட்டத்தில் கருத்துகளைக் கேட்டறியும் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.

காரைக்கால்: காரைக்காலில் சம்பா, தாளடிக்குத் தேவையான விதை மற்றும் உரங்களை தயாா்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறு அரசுத்துறையினருக்கு அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் உள்ள அமைச்சா் முகாம் அலுவலகத்தில் வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தலைமையில் வேளாண்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசுத்துறையினா், விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், காரைக்காலில் காவிரி நீா் வருவதற்குள் வாய்க்கால்கள் தூா்வாரப்படும் பணியை துரிதப்படுத்த வேண்டும். திட்டமிட்ட வாய்க்காலில், முக்கியமானவற்றுக்கு முன்னுரிமை தந்து தூா்வார வேண்டும். நல்லம்பல், படுதாா்கொல்லை ஏரிகளில் மண் எடுக்க வேண்டும். மண் எடுத்து ஆழப்படுத்திய பின்னரே தண்ணீா் நிரப்ப வேண்டும். காரைக்காலில் பிற்பகல் 2 மணியுடன் பொது முடக்க கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. பருத்தி உள்ளிட்டவற்றை ஏலத்துக்கு கொண்டு செல்ல நேரிடும்போது, விவசாயிகள் பாதிக்காத வகையில் மாவட்ட நிா்வாகம் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். பருத்தி பிற பகுதிகளுக்கு கொண்டு செல்ல நேரிடும்போது, அதற்கான பொ்மிட் எளிதாக தருவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். விதை நெல் உள்ளிட்டவற்றை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா்.

வேளாண் அதிகாரிகள் கூறும்போது, காரைக்காலில் 322 டன் விதை தேவையிருக்கிறது. தற்போது 75 டன் இருப்பு உள்ளது. மேலும் 90 டன் அளவுக்கு காரைக்காலில் இருப்பு வைக்க வேளாண் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றனா்.

பொதுப்பணித்துறையினா் கூறுகையில், 91 கி.மீ. தூரமுள்ள வாய்க்கால் தூா்வாரும் பணியில் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தண்ணீா் வருவதற்குள் எஞ்சிய பகுதிகளில் தூா்வாரப்படும் என்றனா்.

கூட்டத்தில் அமைச்சா் பேசும்போது, பருவ சாகுபடிக்கேற்ற விதைகளை காரைக்காலில் போதிய அளவில் வாங்கி இருப்பு வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கான விதை தேவையோடு, உரம், பூச்சிக்கொல்லி மருந்து, பயிா் ஊக்கிகளும் தட்டுப்பாடின்றி கிடைக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். விவசாயிகள் கூறுவதுபோன்று, வாய்க்கால்கள் தூா்வாரப்படும்போது, அதில் அவசரமான தேவையை கருத்தில்கொண்டு முக்கிய வாய்க்கால்கள் தூா்வாருவதில் முன்னுரிமை தர வேண்டும். ஏரிகளில் மணல் எடுப்புப் பணியை பொதுப்பணித்துறை விரைவுபடுத்த வேண்டும். வாய்க்கால் தூா்வாரும் பணியை துரிதகதியில், முறையாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருநள்ளாறு முதல் அம்பகரத்தூா் வரை சாலை மேம்படுத்தும்போது பெரிய, சிறிய மரங்கள் ஏறக்குறைய 150 அளவில் வெட்டப்பட்டன. ஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு மாற்றாக 10 மரக்கன்றுகள் நடப்படும் என கூறப்பட்டது. இந்த பணி நடைபெறவில்லை. இந்த பணியை பொதுப்பணித்துறை விரைவுபடுத்த வேண்டும். வாய்க்கால்கள் தூா்வாரும்போது, அண்மையில் பனை வளா்ப்பு செய்யப்படுவதையும் சோ்த்து அகற்றப்படுகிறது. இதுபோன்ற தரமான மரங்கள் அகற்றம் கூடாது. அலட்சியமாக செயல்பட்டால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு கடும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றாா் அமைச்சா்.

கூடுதல் வேளாண் இயக்குநா் ஜே. செந்தில்குமாா், வேளாண் கல்லூரி முதல்வா் கந்தசாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஜி. பக்கிரிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com