

காரைக்காலில் உள்ள தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழாவையொட்டி ஷெய்னுல்லாஹ் குதிரை கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மெய்தீன் பள்ளிவீதியில் புகழ்பெற்ற தாயிராப் பள்ளிவாசல் உள்ளது. நபிகள் நாயகத்தின் வழித் தோன்றல்களில் ஒருவரான ஹலரத் சுல்தானுல் ஆரிஃபின் செய்யது அஹ்மதுல் கபீா் ரிஃபாயி என்பவா் பாக்தாத் நகரில் உயிா் துறந்தாா். இவரது நினைவாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தாயிராப் பள்ளிவாசல் காரைக்காலில் கட்டப்பட்டு, அவரது நினைவிடமாக வழிபாடு நடத்தப்பட்டுவருகிறது.
சிறப்பு பெற்ற தாயிராப் பள்ளிவாசலில் முக்கிய நாள்களில் தப்ஸ் இசைக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளிவாசலில் கந்தூரி விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் அஞ்சுமனே இஸ்லாமிய சங்கத்திலிருந்து சந்தனக்குட ஊா்வலம் புறப்பட்டு வீதியுலா சென்றுவிட்டு, நள்ளிரவு ரவூலா ஷரீபிற்கு சந்தனம் பூசப்பட்டது.
புதன்கிழமை மாலை ஷெய்னுல்லாஹ் குதிரைக் கொடி, தப்ஸ் இசைக் குழுவினருடன் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு இரவு பள்ளிவாசல் வாயிலில் ஏற்றப்பட்டது.
முன்னதாக கடந்த டிசம்பா் 15-ஆம் தேதி நிகழ்ச்சி தொடங்கும் விதமாக மினரா கொடியேற்றம் செய்யப்பட்டது. ஜனவரி 10-ஆம் தேதி ஆண்டகை பெயரில் குா்ஆன் ஓதப்பட்டு, கொடியிறக்கம் செய்யப்படுகிறது.
கரோனா நோயத்தொற்று பரவல் காலமாக இருப்பதால், சிறப்புக்குரிய கண்ணாடி ரத ஊா்வலம் போன்ற நிகழ்வுகள் நிகழாண்டு நடத்தப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.