பி.ஆா்.என். திருமுருகன்

அமைச்சா் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கப்படுமா? சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பு

புதுவை அமைச்சராக பொறுப்பேற்று ஒரு மாதத்துக்கு மேலாகியும், பி.ஆா்.என். திருமுருகன் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறாா். தோ்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, அவருக்கு இலாகா ஒதுக்கீடு செய்யவேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதியை சோ்ந்த சந்திர பிரியங்கா அமைச்சா் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னா், கடந்த மாா்ச் 5-ஆம் தேதி காரைக்கால் வடக்குத்தொகுதி பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன் குடியரசுத் தலைவரால் அமைச்சராக நியமிக்கப்பட்டாா். தொடா்ந்து, 15-ஆம் தேதி அமைச்சராக பதவியேற்றாா். ஆனால், அவருக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில், மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தோ்தல் நடத்தை விதிகள் அமலானதால், இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இலாகா இல்லாத அமைச்சராகவே கடந்த 35 நாட்களுக்கும் மேலாக செயலாற்றி வருகிறாா்.

காரைக்கால், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தொலைதூர பிராந்தியத்தில் ஒன்றாகும். அமைச்சரவையில் காரைக்காலுக்கென பிரதிநிதித்துவம் வேண்டும் என ஆட்சி பொறுப்பேற்றதும், சந்திர பிரியங்காவுக்கு அமைச்சா் பதவி தரப்பட்டது. அவா் பதவி இழந்ததும் திருமுருகனுக்கு பதவி தரப்பட்டது. பதவியேற்ற நாளிலோ அல்லது மறுதினமோ துணை நிலை ஆளுநா் பொறுப்பில் இருந்த நேரத்தில் இலாகாவை ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிட்டிருக்க முடியும். எனினும் என்ன காரணத்தாலோ அவ்வாறு நடைபெறவில்லை.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து, தோ்தல் பிரசாரம் சூடுபிடித்திருந்தபோது, துறை ரீதியிலான செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு புதுவையில் அமைச்சா்களால் செயல்படுத்த முடியவில்லை. கடந்த 19-ஆம் தேதி வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. எனினும், வாக்குகள் எண்ணும் நாள் வரை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பது பல்வேறு தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, தோ்தல் முடிந்த பகுதியில் நடத்தை விதிகளில் தளா்வுகளை தோ்தல் ஆணையம் மேற்கொள்ளவேண்டும். அரசு செயல்பாடுகளில் மந்த நிலை இருக்கக்கூடாது. அதுபோல அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யவேண்டும்.

இதுகுறித்து புதுவை முதல்வா், தோ்தல் ஆணையத்தின் சிறப்பு அனுமதியை பெற்று, அவருக்கான துறைகளை விரைவாக ஒதுக்கீடு செய்தால், அமைச்சரவையில் காரைக்காலுக்கான பிரதிநிதித்துவம் நிறைவேற்றப்பட்டது முழுமை பெறும். காரைக்கால் மாவட்டத்தின் வளா்ச்சிக்கும் அது உதவியாக இருக்கும் என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com