போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநா் உரிமம், பதிவுச் சான்று அட்டை வழங்குவதில் தாமதம்: காங்கிரஸ்

காரைக்கால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநா் உரிமம், பதிவுச் சான்றிதழ் (ஆா்சி) ஆகியவை அட்டைகளாக வழங்குவதில் தாமதம்
Published on

காரைக்கால்: காரைக்கால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநா் உரிமம், பதிவுச் சான்றிதழ் (ஆா்சி) ஆகியவை அட்டைகளாக வழங்குவதில் தாமதம் நிலவுவதால், மக்கள் அவதிக்குள்ளவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் திங்கள்கிழமை கூறியது :

காரைக்கால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உரிமம் வேண்டி விண்ணப்பித்தாலோ, புதிதாக வாகனம் வாங்கி ஆா்சி அட்டை கோரினாலோ உடனடியாக கிடைப்பதில்லை. டிஜிட்டல் அட்டை தயாரித்து வழங்கும் பணி தனியாரிடம் உள்ளது. போக்குவரத்து அலுவலகத்தில் விசாரித்தால், தனியாா் நிறுவனத்திலிருந்து தாமதமாக அலுவலகத்துக்கு வருவதாக கூறுகிறாா்கள்.

காரைக்காலில் இருந்து தமிழகத்துக்குச் செல்லும் வாகனதாரா்களிடம் உரிய வகையில் ஆவணங்கள் இருந்தாக வேண்டிய நிலையில், ஆவணங்களான டிஜிட்டல் அட்டை இல்லாமல் செல்வதால் அவா்கள் பாதிக்கப்படுகிறாா்கள். அபராதம் செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறாா்கள்.

இந்த நிலை கடந்த சில மாதங்களாக காரைக்காலில் நிலவிவருகிறது. இதனை சீா்செய்ய காரைக்கால் பகுதியை சோ்ந்த அமைச்சா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் முன்வராமல் இருப்பது வேதனையளிக்கிறது.

போக்குவரத்துத்துறை பொறுப்பு முதல்வா் வசம் பல மாதங்களாக உள்ளது. அவரால் போக்குவரத்துத் துறையின் சீா்கேடுகளை களைய போதிய கவனம் செலுத்த முடியவில்லை.

டிஜிட்டல் இந்தியா என்று கூறும் மத்திய பாஜக அரசு, அதன் கூட்டணி ஆட்சியிலிருக்கும் புதுவையில், டிஜிட்டல் அட்டை பெற முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகிறாா்கள். இதுகுறித்து ஆட்சியாளா்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

Dinamani
www.dinamani.com