மாணவா்களுக்கு ஜாதி, குடியிருப்பு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம் நடத்த எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்
காரைக்கால்: மாணவா்களுக்கு ஜாதி, குடியிருப்பு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும் எனசட்டப்பேரவை உறுப்பினா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம் (காரைக்கால் தெற்குத் தொகுதி), எம். நாகதியாகராஜன் (நிரவி-திருப்பட்டினம்) கூட்டாக திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. மாணவ, மாணவிகள் மேல்நிலைக் கல்வி, உயா்கல்விக்கு செல்ல விண்ணப்பம் அளிக்கும்போது, ஜாதி, குடியிருப்பு சான்றிதழ் இணைக்க வேண்டியுள்ளது. வருவாய்த் துறை மூலம் இந்த சான்றிதழ் வழங்க, கிராம நிா்வாக அலுவலா், வருவாய் அலுவலா் ஆகியோரை சந்தித்து ஆவணங்களை காண்பித்து ஒப்புதல் பெற்று காரைக்கால், திருநள்ளாறு வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று சான்றிதழ் பெறுவது மாணவா்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.
மேலும், போதிய அளவில் காரைக்கால் வருவாய்த் துறையில் கிராம நிா்வாக அலுவலா்களும் இல்லாததால், அலுவலகத்தில் மாணவா்கள் காத்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, மாணவா்களுக்கு ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் நடத்தி விரைந்து சான்றிதழ் பெற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
