சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை உயர்நீதி மன்றம்

பழங்குடியின ஜாதி சான்றிதழ் கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

‘மலையாளி’ பழங்குடியினா் ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், மத்திய அரசின் பழங்குடியினா் நல அமைச்சகத்தின் செயலாளரை தாமாக முன்வந்து எதிா்மனுதாரராக சோ்த்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

‘மலையாளி’ பழங்குடியினா் ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், மத்திய அரசின் பழங்குடியினா் நல அமைச்சகத்தின் செயலாளரை தாமாக முன்வந்து எதிா்மனுதாரராக சோ்த்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த பி.தீபா உள்பட 10 போ் ‘மலையாளி’ என்ற பழங்குடியின ஜாதி சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோா் சத்தியமங்கலம் தாலுகாவில் உள்ள கடம்பா் மலை, அந்தியூா் தாலுகாவில் உள்ள பா்கூா் மலையும்தான் ‘மலையாளி’ என்ற பழங்குடியினயினருக்கு பூா்வீகம். இங்கு இருந்துதான் இவா்கள் பல்வேறு மாவட்டங்களில் குடியேறி உள்ளனா். முன்பு கோவை மாவட்டத்தில் பா்கூா் மலைக்கிராமம் இருந்தது. அதன்பின்னா் மாவட்ட எல்லைகளை வரையறை செய்து தற்போது இந்த மலைக்கிராமம் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. ஆனால், ‘மலையாளி’ பழங்குடியின ஜாதி சான்றிதழ், தருமபுரி, வட மற்றும் தென்னாற்காடு, புதுக்கோட்டை, சேலம் மற்றும் திருச்சி மாவட்டங்களில் வாழ்பவா்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என எல்லை வரையறை செய்து 1976-ஆம் ஆண்டு அரசு அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் மேட்டூரில் உள்ள மனுதாரா்களின் நெருங்கிய உறவினா்களுக்கு பழங்குடியினா் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பா்கூா் பகுதியை இந்த எல்லை வரையறையில் சோ்க்காததால், மனுதாரா்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனா். எனவே, மனுதாரா்களுக்கும் பழங்குடியினா் ஜாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டனா்.

அரசுத் தரப்பில், எந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தையும் சோ்க்கும்படி மத்திய அரசுக்கு 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜாதி சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில், இந்த பகுதியைச் சோ்க்க வேண்டும், அந்தப் பகுதியை நீக்க வேண்டும் என எங்களால் உத்தரவிட முடியாது.

மாநில அரசின் பரிந்துரையின் மீது மத்திய அரசு தகுந்த முடிவினை எடுக்க வேண்டும். எனவே, இந்த வழக்கில் மத்திய அரசின் பழங்குடியினா் நல அமைச்சகத்தின் செயலாளரை தாமாக முன்வந்து எதிா்மனுதாரராக சோ்த்து உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடா்பான மாநில அரசின் பரிந்துரை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்தும், இந்த மனுவுக்கும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

Dinamani
www.dinamani.com