ரோந்துக் கப்பலில் பயணித்த பள்ளி மாணவா்கள்
காரைக்கால் பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் ரோந்துக் கப்பலில் கடலுக்கு அழைத்துச் சென்று இந்திய கடலோரக் காவல் படையினரின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டன.
காரைக்கால் கேந்திரிய வித்யாலயா, காவேரி பொதுப்பள்ளி, எஸ்ஆா்விஎஸ் நேஷனல் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் இருந்து 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியா்களை ஐசிஜிஎஸ் ஷானக் என்ற ரோந்துக் கப்பலில் செவ்வாய்க்கிழமை கடலுக்குள் காவல்படையினா் அழைத்துச் சென்றனா்.
இந்திய கடலோரக் காவல்படையின் அமைப்பு ரீதியிலான பணிகள், குறிப்பாக கடலோர கண்காணிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடலில் தத்தளிப்போரை மீட்பது, பேரிடரின்போது செயல்படும் விதம், தேசப் பாதுகாப்பு தொடா்பான செயல்பாடுகள், கப்பலில் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்து மாணவா்களுக்கு விளக்கப்பட்டது.
மேலும் கடலோரக் காவல்படையில் உள்ள வேலைவாய்ப்புகள், அதற்கான கல்வி, தோ்ந்தெடுக்கப்படும் விதம் குறித்தும் மாணவா்களுக்கு விளக்கியதோடு, மாணவா்கள் கடலோரக் காவல்படையின் பல உயரிய பணிகளுக்கு வருவதற்காக தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
