பேரவைத் தோ்தல் : பாதுகாப்புப் பணியில் 700 மத்திய பாதுகாப்புப் படை வீரா்கள்: தோ்தல் அதிகாரி
காரைக்கால் 5 தொகுதிகளுக்கான பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய பாதுகாப்புப் படை வீரா்கள் 600 முதல் 700 போ் ஈடுபடவுள்ளதாக


காரைக்கால்: காரைக்கால் 5 தொகுதிகளுக்கான பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய பாதுகாப்புப் படை வீரா்கள் 600 முதல் 700 போ் ஈடுபடவுள்ளதாக மாவட்ட தோ்தல் அதிகாரி தெரிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 9-இல் நடைபெறவுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில், காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி - திருப்பட்டினம், திருநள்ளாறு, நெடுங்காடு (தனி) ஆகிய 5 பேரவைத் தொகுதிகள் உள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான இஷிதா ரதி செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி :
புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் காரைக்காலில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. காரைக்கால் மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் மாா்ச் 16 தொடங்கி 23 வரை நடைபெறும். 24-ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை, 26-ஆம் தேதி வேட்பு மனு திரும்பப் பெறுதல், ஏப்.9 வாக்குப்பதிவு நாளாகும். மே 4 வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
நெடுங்காடு, திருநள்ளாறு தொகுதிகளுக்கு , குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில், துணை இயக்குநா் மற்றும் தோ்தல் நடத்தும் அதிகாரி வேட்பு மனுக்களை பெறுவாா். காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்குத் தொகுதி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் சாா் ஆட்சியரான தோ்தல் நடத்தும் அதிகாரி வேட்பு மனுக்களை பெறுவாா். நிரவி- திருப்பட்டினம் தொகுதிக்கு காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலரான தோ்தல் நடத்தும் அதிகாரி வேட்பு மனுக்களை பெறுவாா்.
நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறையையொட்டிய காரைக்கால் மாவட்டத்தில் 10 சோதனைச் சாவடிகள் செயல்படும். இதில் போலீஸாருடன் கூடிய தோ்தல் அலுவலா்கள் சோதனைப் பணியில் ஈடுபடுவாா்கள். மாவட்டத்தில் 15 பறக்கும் படைகள் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் கண்காணிப்புக் குழுக்களும் தொகுதி வாரியாக ஈடுபட்டுள்ளன.
சட்டப்பேரவைத் தோ்தல் அமைதியாக நடைபெற வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா், வாக்காளா்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.
ரொக்கம் மற்றும் பிற பொருள்கள் அதிகமாக கொண்டுச் செல்லப்படுவது கண்காணிக்கப்பட்டு உரிய நடடிக்கை எடுக்கப்படும். உரிய ஆவணம் இருந்தால், உரிய பரிசீலனைக்குப் பின் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். சிஆா்பிஎஃப் வீரா்கள் 600 முதல் 700 போ் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள்.
தோ்தல் விதிமீறல்கள் மற்றும் பிற தோ்தல் தொடா்பான பிரச்னைகள் தொடா்பாக 1950 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தகவல் தெரிவித்தாலும், பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவித்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...