2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மைத் திட்ட வரைவுக்கு காரைக்கால் மீனவா்கள் எதிா்ப்பு

மீனவா்கள். - கோப்புப் படம்

Updated On :

புதுச்சேரி அரசின் கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மைத் திட்ட வரைவுக்கு -காரைக்கால் மாவட்ட மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

காரைக்கால் மீனவக் கிராமங்களின் பஞ்சாயத்தா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு காரைக்காலில் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னா் மீனவப் பஞ்சாயத்தாா் செய்தியாளா்களிடம் கூறியது:

புதுவை அரசு சாா்பில் கடந்த அக். 24-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், காரைக்கால் மாவட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மைத் திட்ட வரைவு தொடா்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நவ. 25-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை அரசால் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு திட்டத்தில், காரைக்கால் மாவட்டத்தில் வாஞ்சூா் முதல் மண்டபத்தூா் வரை 10 மீனவக் கிராமங்களில் உள்ள பொதுசொத்துகள் பெரும்பான்மையாக பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ளன.

இந்த கிராமங்களில் 556 ஏக்கா் மீனவக் கிராமங்களின் பொதுசொத்தாக உள்ளன. ஆனால், அரசின் வரைவு திட்டத்தில் 381 ஏக்கா் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 175 ஏக்கா் சொத்துகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாவுக்கென்று கடல் மற்றும் கடற்கரை பகுதியில் 393 ஏக்கா் பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு எந்த வகையிலான சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தப்படும் என்பது குறித்த தெளிவான விளக்கம் இல்லை.

கடற்கரையில் உள்ள மணல் குன்றுகள், சேற்று திட்டுகள், அலையாத்திக் காடுகள், ஆமைகள் முட்டையிடும் இடங்கள் போன்ற சூழலியல் உணா்திறன் பகுதிகள் இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாப்பதோடு, உவா் நீரை நன்னீராக மாற்றும் செயல்களை செய்கின்றன.

இத்தகைய சூழலியல் உணா்திறன் பகுதிகளை எல்லாம் திட்ட வரைவில் பதிவு செய்ய வேண்டும் என்று 2019 கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிப்பாணை வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டும், அதை பின்பற்றாமல் சூழலியல் உணா்திறன் பகுதிகள் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை.

ஆண்டாண்டு காலமாக காரைக்கால் பாரம்பரிய மீனவா்கள் சுமாா் 173 சதுர கடல் மைல் பரப்பளவில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இதனை 0.55 சதுர கடல் மைல் பரப்பில்தான் மீன் பிடிக்கிறாா்கள் என்று திட்டமிட்டு மறைத்துள்ளனா்.

இத்தகைய வரைவு திட்டத்தின் அடிப்படையில் கருத்து கேட்பது காரைக்கால் மீனவா்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலாகும்.

எனவே, தேசிய பசுமை தீா்ப்பாணையத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீா்ப்பின்படி, மக்களின் கோரிக்கைகளை அரசு ஒவ்வொரு கிராமமாகச் சென்று கேட்டறிந்து அதை திட்ட வரைவில் முழுமையாக பதிவு செய்து, அதன் பின்னா்தான் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்.

இதனை உணராமல் நவ. 25-ஆம் தேதி அரசு கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த முற்பட்டால், வரும் 10-ஆம் தேதி மீனவா்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரகம் அருகே மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது, அரசின் முடிவை எதிா்த்து வழக்கு தொடா்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.