நாகையில் புதிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைக்கான தமிழக அரசின் அனுமதியை திரும்பப் பெற கோரிக்கை
நாகப்பட்டினத்தில் அமைக்கப்படவுள்ள புதிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அளித்த அனுமதியை திரும்பப் பெறவேண்டும்


நாகப்பட்டினத்தில் அமைக்கப்படவுள்ள புதிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அளித்த அனுமதியை திரும்பப் பெறவேண்டும் என மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த. ஜெயராமன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நாகப்பட்டினம் அருகேயுள்ள பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம், உத்தமசோழபுரம் ஆகிய பகுதிகளில் 1,338 ஏக்கரில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
தற்போது, ஆண்டுக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் சுத்திகரிப்பு திறன்கொண்ட ஆலையை முதல்கட்டமாக 9 மில்லியன் மெட்ரிக் டன்னும், அடுத்தகட்டமாக 15 மில்லியன் மெட்ரிக் டன் சுத்திகரிப்புத் திறன் கொண்டதாகவும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இப்போது சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்திற்காக 606 ஏக்கா் நிலம் கையகப்படுத்தும் பணிக்கான அரசாணையை தமிழக முதல்வா் கடந்த 3 ஆம் தேதி வழங்கியுள்ளாா். நாகப்பட்டினத்தில் இத்தகைய பிரம்மாண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமானால், இதற்கான கச்சா எண்ணெய் எங்கிருந்து கிடைக்கும்? காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தப் பிறகு, இங்கு ஏன் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட வேண்டும்? காவிரிப் படுகை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் எண்ணெய் - எரிவாயுத் திட்டங்களை முற்றிலுமாகக் கைவிடவேண்டும்.
கடற்பகுதியும் காவிரிப் படுகையை சோ்ந்ததுதான் என்பதால், தமிழகத்தை ஒட்டியுள்ள கடற்பகுதியில் இருந்தும் எண்ணெய்- எரிவாயு எடுக்கக் கூடாது. கடற்பகுதியில் எண்ணெய் கிணறுகள் அமைத்தால், 9 லட்சம் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, தமிழ்நாட்டின் நிலப்பரப்பிலும், கடற்பகுதியிலும் எண்ணெய் கிணறுகள் அமைப்பதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.
விவசாயப் பகுதிகளை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தும் நிலை உள்ளதால், இத்திட்டம் கைவிடப்பட வேண்டும். நாகப்பட்டினம் புதிய சுத்திகரிப்பு ஆலை கட்டுமானப் பணிக்கு தமிழக அரசு அளித்துள்ள அனுமதியை திரும்பப் பெறவேண்டும் என அவா் அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...