ஹைட்ரோகார்பன் திட்ட விளைவுகள்: உயர்நிலை வல்லுநர் குழு நியமனத்துக்கு மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு வரவேற்பு

ஹைட்ரோகார்பன் திட்ட விளைவுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு அமைத்துள்ள உயர்மட்ட தொழில்நுட்ப வல்லுனர் குழுவிற்கு  மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன்
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன்

ஹைட்ரோகார்பன் திட்ட விளைவுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு அமைத்துள்ள உயர்மட்ட தொழில்நுட்ப வல்லுனர் குழுவிற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு விவசாயத்தையும் மண்ணையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் கிணறுகள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் 5 கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி அனுமதி கோரிய போது, அதை தமிழ்நாடு அரசு நிராகரித்தது.

மேலும், தமிழ்நாடு முழுவதுமே எண்ணெய் - எரிவாயுக் கிணறுகள் அமைக்க அனுமதி இல்லை என்று அறிவித்தது. தொடர்ந்து வேளாண்மையைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக வேளாண்மை நிதிநிலை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தற்போது ஹைட்ரோகார்பன் விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய ஏழு பேர் கொண்ட உயர்மட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

2020 பிப்ரவரி 21-ஆம் நாள், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டம் - 2020 செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் வரம்புக்குள் முழு காவிரிப்படுகை கொண்டுவரப்படவில்லை. மேலும், பழைய எண்ணெய் எரிவாயுத் திட்டங்கள் நடைபெறுவதை அச்சட்டம் தடுக்கவில்லை.

இப்போது அதன் அடுத்த கட்டமாக  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கு வெளியிலுள்ள நிலப்பரப்புகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய தொழில்நுட்ப வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கமும் பொறுப்புகளும்  வரையறுக்கப்பட்டுள்ளன.

நீரியல் விரிசல் உள்ளிட்ட எண்ணெய்க் கிணறு துரப்பண தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், இரசாயன பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்,   நிலக்கரி படுகை, மீத்தேன், ஷேல் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன்  திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலத்தடி நீரின் அளவு, இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் நிலத்தின் மட்டம் கீழிறங்கி தாழ்ந்து போகுமா?, மற்றும் நிலத்தடித் தட்டுகள் இடம்பெயர்ந்து நகருமா? போன்ற ஆய்வுகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் எப்படி பாதிக்கப்படும்? தமிழ்நாட்டின் உணவு உறுதிப்பாடு எந்த அளவில் பாதிப்புக்கு உள்ளாகும்? என்ற ஐந்து ஆய்வு நோக்கங்களும்,  பொறுப்புகளும் குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக 6 ஹைட்ரோகார்பன் திட்டங்கள், பொதுவாக ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் மற்றும் சுரங்கப் பணிகள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறது.

மண்ணையும் மக்களையும் பாதுகாப்பதில் இந்த குழுவின் அறிக்கை முக்கியப் பங்களிக்கும் என்று நம்புகிறோம். எந்த ஒரு திட்டத்தையும் தடைசெய்ய சான்றாக ஓர் அறிவியல் பூர்வமான ஆய்வு அறிக்கை தேவை. ஆகவே, தமிழ் நாட்டை நாசம் செய்யும் எண்ணெய் - எரிவாயுத் திட்டங்களை தவிர்த்து, மண்ணையும், நீரையும் பாதுகாக்க இந்த அறிக்கை எதிர்காலத்தில் முக்கிய பங்களிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ள உயர்மட்டத் தொழில்நுட்ப வல்லுநர் குழு தமிழ்நாட்டின் மண்ணையும், நீரையும், சுற்றுச்சூழலையும், மக்களின் வாழ்வாதாரங்களையும், தமிழ் நாட்டின்  உணவு உறுதிப்பாட்டையும் பாதுகாக்க உதவும் என்பதால், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தமிழ்நாடு அரசின் அறிவிப்பை வரவேற்கிறது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com