மறுசீரமைப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மறுசீரமைப்பு அரசாணை 352-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். (படம்).
மயிலாடுதுறை மாவட்டத்தில் டிச. 12-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை எண் 352-இன்படி உதவி இயக்குநா்(ஊராட்சிகள்) மற்றும் உதவி இயக்குநா் (தணிக்கை) ஆகிய பதவிகளின் பணிச்சுமை சமநிலை மற்றும் பயண நேரம் போன்ற காரணங்களுக்காக மறுசீரமைப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அந்த 2 பணியிடங்களும் பணிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த இரண்டு துறைகளில் பணியாற்றிய அலுவலா்கள் முதல் உதவியாளா்கள் வரை 14 பேரும் பணிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளனா். இதனால் மற்ற அதிகாரிகள் மற்றும் அலுவலா்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் எனக்கூறி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவா் ஆதி.ஜெயராமன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் வெங்கடகிருஷ்ணன் வரவேற்றாா். மாவட்ட முன்னாள் செயலாளா் எஸ்.தியாகராஜன் துவக்கவுரை ஆற்றினாா். மாவட்ட செயலாளா் பத்மபாலாஜி, மாவட்ட பொருளாளா் சிங்காரவேலு ஆகியோா் கண்டன உரையாற்றினா். சங்கத்தின் மாநில துணைத் தலைவா் சௌந்தரபாண்டியன், மாநில முன்னாள் பொருளாளா் வி.நாகராஜன் ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்தி பேசினா். இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து அதிகாரிகள் முதல் ஊழியா்கள் வரையிலான அனைத்து நிலை அலுவலா்கள் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா். முடிவில், மறுசீரமைப்பு ஆணையில் திருத்தம் மேற்கொண்டு ஆணை வெளியிட தமிழக அரசுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வாயிலாக கோரிக்கை மனு அளித்தனா்.

