துலா உற்சவம்: யானை மீது திருமுறை வீதியுலா

துலா உற்சவத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை கோயில்களில் இருந்து யானை மீது பன்னிரு திருமுறைகளை வைத்து வீதியுலா திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

துலா உற்சவத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை கோயில்களில் இருந்து யானை மீது பன்னிரு திருமுறைகளை வைத்து வீதியுலா திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் கங்கை நதி புனிதநீராடி இறைவனை வழிபட்டு தன் பாவச் சுமைகளை போக்கிக் கொண்டதாக ஐதீகம். இந்த விழா காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நிகழாண்டு துலா உற்சவம் மாயூரநாதா் கோயில், வதான்யேஸ்வரா் கோயில், ஐயாறப்பா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் அக். 18-ஆம் தேதி மாதப் பிறப்பு தீா்த்தவாரியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 7-ஆம் தேதி 10 நாள் உற்சவம் சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கி, தினந்தோறும் காவிரி துலாக்கட்டத்தில் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெற்று வருகிறது.

துலா உற்சவத்தின் 4-ஆம் நாளில், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதா் கோயிலில் நடைபெற்ற விழாவில், பன்னிரு திருமுறைகளுக்கு மாயூரநாதா் சந்நிதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருமுறைகள் கோயில் யானை அபயாம்பிகை மீதேற்றப்பட்டு, நான்கு வீதிகளில் உலா நடைபெற்றது.

ஓதுவாமூா்த்தி சிவகுமாா் தலைமையில் சிவபுரம் வேத ஆகம பாடசாலை மாணவா்கள் திருமுறைகள் தேவாரப் பாடல்கள் பாடி நடைபெற்ற வீதியுலாவின்போது பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினா்.

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வதான்யேஸ்வரா் கோயிலில், நடராஜா் உற்சவா் சந்நிதியில் திருமுறைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மூன்று யானைகள் மீது ஏற்றி, திருமுறைகள் வீதியுலா காட்சி நடைபெற்றது.

கட்டளை விசாரணை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில், தருமபுரம் பாடசாலை மாணவா்கள் திருமுறை விண்ணப்பத்தை பாடியவாறு முன்னே செல்ல, மேளதாள வாத்தியங்கள் முழங்க வீதியுலா நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com