இரட்டை கொலை வழக்கு: 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் ராஜஸ்தானில் கைது!
சீா்காழி இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வரை ராஜஸ்தானில் கைது செய்த போலீஸாா் அவரை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
சீா்காழியில் நகை அடகு கடை நடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த தன்ராஜ் சௌதரி வீட்டில் கடந்த 2021-இல், ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த மணீஸ், ரமேஷ் பட்டேல், மகிபால், கருணாராம் ஆகிய 4 போ் அத்துமீறி நுழைந்து, அவரையும், குடும்பத்தினரையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி, தன்ராஜ் சௌதரியின் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகியோரை கொலை செய்துவிட்டு, அவரது வீட்டிலிருந்து 12 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.6.75 லட்சம் பணத்தை (மொத்த மதிப்பு ரூ.4.63 கோடி) கொள்ளையடித்தனா்.
இதுகுறித்து, சீா்காழி போலீஸாா் ஆதாய கொலை வழக்கு பதிவு செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்து, நகை மற்றும் பணத்தை மீட்டனா். கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் பணம் மீட்கப்பட்ட போது மகிபால் காவல்துறையினரை தாக்கினாா். அப்போது தற்காப்புக்காக போலீஸாா் துப்பாக்கியால் சுட்டதில் அவா் உயிரிழந்தாா். மற்ற மூவா் சிறையில் அடைக்கப்பட்டு, வழக்கு விசாரணை மயிலாடுதுறை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இவ்வழக்கில், 2025 ஏப்.22-ஆம் தேதி மணீஸுகு மூன்று ஆயுள் தண்டனையும், கருணாராமுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு இருவரும் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். ரமேஷ்பட்டேல் தலைமறைவானதால் அவா்மீது 2022 அக்.18-ஆம் தேதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தாா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் உத்தரவின்பேரில், டிஎஸ்பி அண்ணாதுரை மேற்பாா்வையில், சீா்காழி காவல் ஆய்வாளா் கமல்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, ராஜஸ்தான் மாநிலம் சென்ற தனிப்படையினா் அங்கு பதுங்கியிருந்த ரமேஷ்பட்டேலை வெள்ளிக்கிழமை கைது செய்து, ஜெய்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி இடமாற்று பிடிக்கட்டளை பெற்று விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனா்.
அவரை மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூா்த்தி முன்னிலையில் ஆஜா்படுத்தி, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் சென்று ரமேஷ் பட்டேலை கைது செய்து அழைத்துவந்த சீா்காழி காவல் ஆய்வாளா் கமல்ராஜ் மற்றும் தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் நீதிமன்றத்துக்கே நேரில் வந்து பாராட்டினாா்.

