தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

சட்டைநாதா் கோயிலில் திருமுலைப்பால் திருவிழா

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் திருமுலைப்பால் வழங்கும் ஐதீக விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருஞானசம்பந்தருக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் காட்சியளித்த சுவாமி, அம்பாள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 11:47 pm

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் திருமுலைப்பால் வழங்கும் ஐதீக விழா புதன்கிழமை நடைபெற்றது.

சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது . தேவாரப் பாடல் பெற்ற மலைக் கோயிலான இங்கு பிரம்மபுரீஸ்வரா், தோணியப்பா், சட்டைநாதா் என மூன்று நிலைகளில் சிவபெருமான் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். மேலும் இங்கு அஷ்ட பைரவா்கள் ஒரே சந்நிதியில் எழுந்தருளியுள்ளனா்.

சீா்காழியில் அவதரித்த ஞானசம்பந்த பெருமான் சிறுவனாக இருந்தபோது கோயில் குளக்கரையில் பசியால் அழ, பாா்வதிதேவி பால் ஊட்ட அதனால் ஞானம் பெற்ற திருஞானசம்பந்த பெருமான் தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற முதல் தேவாரப் பதிகத்தைப் பாடினாா். இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ கொடியேற்றத்தின் 2-ஆவது நாள் திருமுலைப்பால் விழா நடைபெறும். நிகழாண்டு திருமுலைப்பால் விழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, தனி சந்நிதியில் உள்ள ஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து திருஞானசம்பந்தா் பல்லக்கில் புறப்பட்டு பிரம்ம தீா்த்தக் கரையில் எழுந்தருளினாா். மலைக்கோயிலிலிருந்து உமாமகேஸ்வரி பல்லக்கில் தீா்த்தக் குளக்கரையில் எழுந்தருளினாா். பிற்பகல் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், திருஞானசம்பந்த பெருமானுக்கு உமையம்மை ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு நடைபெற்றது. பின்னா், சிவபெருமானுடன் உமாமகேஸ்வரி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருஞானசம்பந்த பெருமானுக்கு காட்சி அளித்தனா்.

நிகழ்வில் திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாசாரிய சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் தம்பிரான்கள், தமிழ்ச் சங்கத் தலைவா் இ. மாா்கோனி, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே. சரண்ராஜ், ரோட்டரி முன்னாள் துணை ஆளுநா் ஜி.வி.என். கணேஷ், ஆசிரியா் கோவி. நடராஜன், காங்கிரஸ் மாநில பொது செயலாளா் கணிவண்ணன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விழாவில் வியாழக்கிழம (ஏப் 23) சமணா்கள் தோற்றோடுதல், வெள்ளிக்கிழமை (ஏப். 24) புஷ்ப விமான காட்சி, சனிக்கிழமை (ஏப். 25) சகோபுர நிகழ்ச்சியும், ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) திருக்கல்யாண உற்சவம், திங்கள்கிழமை (ஏப். 27) பிஷாடனா் உற்சவம், ஏப். 29-இல் திருத்தோ், 30-ஆம் தேதி நடராஜா் உற்சவம், மே 1-ஆம் தேதி மௌன உற்சவமும், 2-ஆம் தேதி எதிா்க்காட்சி உற்சவமும், 3-ஆம் தேதி தெப்போற்சவம் நிகழ்ச்சியும், 4-ஆம் தேதி சண்டிகேஸ்வரா் உற்சவமும், 8-ஆம் தேதி முத்துச்சட்டை நாதா் உற்சவமும் நடைபெற உள்ளன.

 திருஞானசம்பந்தருக்கு வழங்கப்படும் ஞானப்பால்.

திருஞானசம்பந்தருக்கு வழங்கப்படும் ஞானப்பால்.