பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெறக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 60 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். பேருந்து கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள், பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அங்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய அரசே நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியல் போராட்டத்துக்கு சி.பி.எம். மாவட்டச் செயலரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான நாகை மாலி தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான வி. மாரிமுத்து, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.வி. முருகையன், ஐ.வி. நாகராஜன், திருவாரூர் மாவட்டச் செயலர் ஜி. சுந்தரமூர்த்தி மற்றும் நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பின்னர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.