பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பழுதடைந்த புத்தூர் மேம்பாலம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

பாலத்தின் மேல்தள இணைப்புகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, கடந்த ஓராண்டாக பயன்பாடற்ற நிலையில் இருக்கும் நாகை புத்தூர்

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:54 am

DIN

பாலத்தின் மேல்தள இணைப்புகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, கடந்த ஓராண்டாக பயன்பாடற்ற நிலையில் இருக்கும் நாகை புத்தூர் ரயில்வே மேம்பாலத்தை விரைந்து சீரமைத்து, பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
நாகை - தூத்துக்குடி கிழக்குக் கடற்கரை சாலையில்,  நாகையை அடுத்த புத்தூர் அருகே அமைந்துள்ளது நாகை - வேளாங்கண்ணி ரயில்வே மேம்பாலம். கடந்த 2011-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்தப் பாலம், கடந்த 2013-ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை பராமரிப்புக்கும், மக்கள் பயன்பாட்டுக்கும் ஒப்படைக்கப்பட்டது.  
நாகை -  திருவாரூர் தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் போது, நாகை - வேளாங்கண்ணி சாலை மார்க்கத்தில் பயணிக்க, புத்தூர் ரயில்வே கேட் பகுதியில் பல மணி நேரங்கள் காத்திருந்து அவதிக்குள்ளான வாகன ஓட்டிகளுக்கு, இந்தப் பாலம் மிகப் பெரும் ஆறுதலாக அமைந்தது. மேலும், இந்தப் பாலம், கிழக்குக் கடற்கரை சாலை வழியே தொலைதூர பயணம் மேற்கொள்ளும் இலகுரக, கனரக வாகனங்களுக்கான முக்கிய போக்குவரத்துத் தடமாகவும் விளங்கியது. 
இந்த மேம்பாலத்தின் மேல்தள இணைப்புகளுக்கு இடையேயான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அதனால் மேம்பாலம் வழியே வாகனங்கள் பயணிக்கும் போது, அதிக அதிர்வு ஏற்படுவதாகவும் கடந்த 2016-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவ்வப்போது சர்ச்சைகள் ஏற்பட்டன. ஆனால், அதுகுறித்த உயர் விழிப்புணர்வு ஏதும் ஏற்படவில்லை.  
இந்த நிலையில், 2017-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி புத்தூர் ரயில்வே மேம்பாலத்தின் வடப்புற பகுதி எக்ஸ்பேன்சன் இணைப்பில் இடைவெளி அதிகமாகி சுமார் அரை அடி அகலத்துக்கும் அதிகமான விரிசல் ஏற்பட்டது.  இதனால், இந்தப் பாலம் வழியேயான போக்குவரத்து அபாயகரமானதாகியது. இதன் காரணமாக,  மார்ச் 25-ஆம் தேதி இரவு முதல் இந்தப் பாலம் வழியேயான வாகனப் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி, பாலத்தை சீரமைக்கும் பணிக்கான முயற்சிகளை நெடுஞ்சாலைத் துறையினர் 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில்  மேற்கொண்டனர். இடைவெளி மிக அதிகமாகியிருந்த ஒரு எக்ஸ்பேன்சன் இணைப்பில், இடைவெளியைக் குறைக்கவும், இடைவெளி அதிகமாகாமல் தடுக்கவும் இரும்புப் பட்டைகளை பொருத்தும் பணிகளை அவர்கள் மேற்கொண்டனர். ஆனால், அந்த முயற்சிகளுக்கு உரிய பயன் இல்லாததன் காரணமாக, அந்தச் சீரமைப்புப் பணிகள் 
கைவிடப்பட்டன.
இதன் காரணமாக, கடந்த 11 மாதங்களாக இப்பாலம் பயனற்ற பாலமாகவே காட்சியளித்துக் கொண்டு உள்ளது.   நாகை, திருவாரூர், காரைக்கால் தடங்களிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியே வேளாங்கண்ணி செல்லும் வாகனங்கள், புத்தூர் ரயில்வே கேட் வழியாகவே செல்ல வேண்டியுள்ளது. இதனால்,  புத்தூர் அண்ணா சிலை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன், பொதுமக்களும், வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் பெரும் அவதிக்குள்ளாக 
நேரிடுகிறது.
வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், நாகை ரயில் நிலையத்துக்கு வந்து ஏதேனும் ஒரு ரயிலில் பயணிக்க வேண்டுமெனில், ரயில் புறப்படுவதற்குச் சில, பல மணி நேரங்களுக்கு முன்பாகவே தோணித்துறை ரயில்வே கேட் அல்லது புத்தூர் ரயில்வே கேட்டை கடந்து நாகை வந்தால் மட்டுமே,  அவர்களுக்கான ரயில் பயணம் சாத்தியமாகிறது. 
காரணம், காரைக்கால் - நாகை - திருவாரூர் தடத்தில் நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்கள் எந்த நேரத்தில் இயக்கப்படும் என்பது அட்டவணைப்படுத்தப்படாத நிலையில், இந்த சரக்கு ரயில்களுக்காக சுமார் 30 நிமிடத்திலிருந்து சுமார் 45 நிமிடங்கள் வரை கூட ரயில்வே கேட்டுகள் மூடப்படுகின்றன. இதனால், சில மணி நேரங்களுக்கு முன்பாக ரயில்வே கேட்டுகளைக் கடந்து நாகைக்குள் வராதவர்கள், ரயில்வே கேட் அருகே நின்று தாங்கள் பயணிக்க வேண்டிய ரயில், புறப்பட்டுச் செல்வதை வேடிக்கைப் பார்த்துவிட்டு வேதனையுடன்தான் செல்ல நேரிடுகிறது.    
கடந்த ஜூன் மாதம் முதல், அரசுத்துறை அலுவலர்கள் அவ்வப்போது இந்தப் பாலம் பகுதியில் ஆய்வு மேற்கொள்வதும், திரும்பிச் செல்வதும் மட்டுமே வழக்கமாக உள்ளது. இதனால், ஒரு பயனும் ஓராண்டாக இல்லை என்ற சலிப்பே இப்பகுதி மக்களிடையே மேலோங்கியுள்ளது. 

சீரமைப்புக்கு 5 கோடி நிதி...
இந்தப் பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா? என்பது குறித்து நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் ஜெ. இளம்வழுதியிடம் கேட்ட போது, அவர் தெரிவித்தவை : 
இந்தப் பாலம், ரயில்வே துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை என இரு அரசுத் துறைகள் சார்ந்தது. ரயில்வே துறையின் அனுமதி பெற்ற பின்னரே இந்தப் பாலத்தை சீரமைக்க முடியும். தற்போது, ரயில்வே துறையின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
சீரமைப்புப் பணி தொடர்பாக, தொழில்நுட்பக் குழு மூலம் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
மேம்பாலத்தின் மேல் தளம் முழுமையையும் உயர்த்தி சீரமைக்க வேண்டியுள்ளது.  அதனுடன் அணுகுசாலையையும் சீரமைக்க வேண்டும் என தொழில்நுட்பக் குழுவினர் பரிந்துரைத்துள்ளனர். 
இந்தச் சீரமைப்புப் பணிகளுக்காக ரூ. 5.35 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்ட மதிப்பீடு தொடர்பாக  நெடுஞ்சாலைத் துறை முதன்மைப் பொறியாளரின் அனுமதியும், அதைத் தொடர்ந்து நிதி ஒதுக்கீடும் வரும் ஒரு சில நாள்களில் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  சீரமைப்புப் பணிகளுக்கு மார்ச் மாதத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ஜூலை மாத இறுதியில் பணிகள் நிறைவடைய வாய்ப்புகள் உள்ளன என்றார் அவர்.
பல கோடி மதிப்பில் கட்டப்பட்டு 10 ஆண்டுகள் பயன்பாட்டைக் கூட நிறைவு செய்யாத இந்த ரயில்வே மேம்பாலம் பழுதடைந்ததைத் தொடர்ந்து, யூகத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள பல்வேறு அச்சங்களுக்கான தீர்வு, பாலம் பயன்பாட்டுக்கு வரும் போதும், அதன் உறுதித் தன்மை உறுதி செய்யப்படும் போதுதான் கிடைக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.