உணவகங்களில் நோய் எதிர்ப்பு சக்தி உணவு: வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் புதுமை

சீர்காழி வட்டம், வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி பகுதியில் உள்ள உணவகங்களில் கரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவு வகைகளை கட்டாயம் சேர்த்து வழங்கிட பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி
வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி
வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி

சீர்காழி வட்டம், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பகுதியில் உள்ள உணவகங்களில் கரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவு வகைகளை கட்டாயம் சேர்த்து வழங்கிட பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி தமிழகத்திலேயே புதுமையாக செயல்படுத்தி வருவது மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

பெரும்பாலும் உணவகங்களில் இன்றைய ஸ்பெஷல் என ஒரு போர்டு இருக்கும். அதில் அன்றைய மெனுவில் என்ன எழுதி இருக்கிறதோ அந்த காய்கறிகள் தான் அன்று மார்க்கெட்டில் விலை குறைவு என நாம் முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் உள்ள உணவகங்களில் இன்று மதியம் என்ன மெனு என்பதை முடிவு செய்வது உணவக உரிமையாளரோ அல்லது உணவு தயாரிக்கும் சமையலரோ அல்ல. மாறாக புதுமையான பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன் முடிவு செய்கிறார்.

இந்தியாவிலேயே முன் மாதிரியாக ஒவ்வொரு உணவக வாசலிலும் இன்றைய ஸ்பெஷல் என்கிற போர்டை பேரூராட்சியே வைத்து நூதனமாக அசத்தி வருகிறது பேரூராட்சி நிர்வாகம். கரோனவை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு தரும் உணவு முறை அவசியம் என்பதில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறார். வைத்தீஸ்வரன் கோயிலில் வீடுகளில் தினம் தினம் ஒரே வகை உணவு சாப்பிட்டு சலித்து வந்தவர்களுக்கு ருசியான சத்தான சமையல் வழங்கி பொதுமுடக்கம் ஆரம்ப காலகட்டத்தில் வீட்டிலேயே மக்களை இருக்கவைக்க ஆரோக்கிய சமையல் ஆன் லைன் போட்டி நடத்தி தினம் ஒரு சத்தான சமையல் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் செயல்அலுவலர். 

பேரூராட்சித்துறை மக்களுக்கு அன்றாட அத்தியாவசிய சேவைகளை வழங்கும் துறை என்பதால் "ஒர்க் பிரம் ஹோம் வசதி பணியாளர்களுக்கு இல்லை என்பதால் அனைவரும் அலுவலகம் வரவேண்டி உள்ளதால் குக் பிரம் ஆபீஸ் என அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் சத்தான மண்பாண்ட சமையல் அலுவலகத்திலேயே சமைக்க வைத்து விழிப்புணர்வு செய்தார். இதன் நீட்சியாக தற்போது வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் உள்ள அனைத்து உணவகங்களிலும் ஆரோக்கிய, சத்தான, நோய் எதிர்ப்பு சக்தி உணவினை வழங்கிட அறிவுறுத்தி அதனை செயல்படுத்தியுள்ளனர். 

இதற்காக உணவக உரிமையாளர்களை அழைத்து பேசிய செயல் அலுவலர் நோய் எதிர்ப்பு உணவு முறை பட்டியலை முடிவு செய்தார். எளிய நோய் எதிர்ப்பு உணவு முறைகளையே பரிந்துரைத்து உணவுப் பட்டியலை மட்டும் விலைபட்டியலை திருத்திவிடாதீர்கள் எனவும் அன்பாக கேட்டுக்கொண்டார். இந்திய நாட்டிலேயே முன் மாதிரியாக பேரூராட்சியால் இன்றைய மதிய உணவு ஸ்பெஷல் என ஒவ்வொரு உணவக வாசலிலும் வைக்கப் பட்டுள்ள பட்டியலில் மிளகு சீரகப் பொடி, கீரைகூட்டு, காய்கறி சாம்பார், தூதுவளை - எலுமிச்சை ரசம், இஞ்சி கலந்த மோர், நெல்லிக்காய் ஊறுகாய் அல்லது துவையல் மற்றும் இந்துப்பு என்கிற உணவுகளும் நோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்கிற திருக்குறளும் பொருத்தமாக இடம் பெற்றுள்ளது.

இதில் பெரிய ஆச்சரியமே உணவக உரிமையாளர்கள் இந்த உணவுப் பட்டியலை மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டது தான். உணவக உரிமையாளர்களுடன் இது பற்றி கேட்டபோது, வாடிக்கையாளர் நலனில் அக்கறையுடன் நாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், கரோனா தடுப்பில் முனைப்பு காட்டும் பேரூராட்சியுடன் நாங்களும் பங்கு பெறும் வாய்ப்பாக இதை கருதுவதாக குறிஞ்சி உணவகம் சாந்த மோகன், பாலாஜி பவன் கார்த்திக், மங்கல விலாஸ் தியாகராஜன் என அனைவரும் அனைவரும் ஒருமித்த குரலில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

கரோனாவிலிருந்து மக்களை காக்கத் துடிக்கும் ஒரு அதிகாரியும் வாடிக்கையாளர்களை காக்கத் துடிக்கும் உணவக உரிமையாளர்களும் வைத்தீஸ்வரன் கோயில் மக்கள் பாராட்டுக்களை முகநூல், கட்செவி போன்ற இணையதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com