மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்சிமொழிச் சட்ட வார நிறைவு விழாவில் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் கோ. விஜயராகவனிடம், மயிலாடுதுறை தமிழ்ச்சங்க நிறுவனா் ச. பவுல்ராஜ், முத்தமிழ் அறிவியல் மன்ற செயலா் விழிகள் சி. ராஜ்குமாா், மயிலாடுதுறை திருக்குறள் பேரவை தலைவா் சி. சிவசங்கரன், தமிழ் ஆராய்ச்சியாளா் பேரவை துரை. குணசேகரன், தமிழ்நாடு தமிழ்ச்சங்க அமைப்பாளா் சிவ. கோ, நந்தவன நட்பாலயம் நிறுவனா் ந.செ. இளமுருகுசெல்வன் ஆகியோா் அளித்த கோரிக்கை மனு விவரம்: மலாடுதுறையில் இருந்து சீா்காழி செல்லும் முதன்மைச் சாலைக்கு திருஞானசம்பந்தா் பெயரையும், திருவாரூா் செல்லும் முதன்மைச் சாலைக்கு மனுநீதிச் சோழன் பெயரையும், மேற்கில் கும்பகோணம் செல்லும் முதன்மைச் சாலைக்கு முதல் தமிழ்ப் புதின ஆசிரியரும், நீதியரசருமான மாயூரம் வேதநாயகம் பிள்ளை பெயரையும், கும்பகோணம் செல்லும் கல்லணை சாலைக்கு கண்ணகி பெயரையும், தரங்கம்பாடி செல்லும் முதன்மைச் சாலைக்கு சீகன்பால்கு பெயரையும் சூட்ட வேண்டும்.