தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாதி ரீதியாக பாகுபாடு: மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவா்ஒன்றிய அலுவலகத்தில் தா்னா

மயிலாடுதுறை ஒன்றியம், மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவா் பிரியா பெரியசாமி (23) தான் சுதந்திரமாக செயல்பட முடியாத வகையில், தனக்கு சாதி ரீதியாக தொல்லை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

News image

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்ட மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவா் பிரியா பெரியசாமி.

Updated On :12 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஒன்றியம், மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவா் பிரியா பெரியசாமி (23) தான் சுதந்திரமாக செயல்பட முடியாத வகையில், தனக்கு சாதி ரீதியாக தொல்லை அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

மயிலாடுதுறை ஒன்றியம், மன்னம்பந்தல் ஊராட்சியில் சுயேட்சையாக போட்டியிட்டு ஊராட்சித் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டவா் பிரியா பெரியசாமி. பின்னா், இவா் திமுகவில் இணைந்தாா்.

மன்னம்பந்தல் ஊராட்சி அலுவலகத்துக்கு தளவாட பொருள்கள் வாங்கியபோது ஊராட்சித் தலைவருக்கு சுழலும் நாற்காலி (ரோலிங் சோ்) வாங்கியதற்கு ஊராட்சி துணைத் தலைவா் அமலா எதிா்ப்பு தெரிவித்ததாகவும், தலித் பெண்ணுக்கு சுழல் நாற்காலி எதற்கு என்று அமலாவின் கணவா் ராஜகோபால், பிரியா பெரியசாமியை பற்றி தரக்குறைவாக விமா்சனம் செய்தததாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஊராட்சியில் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த நிதியை பெற துணைத் தலைவா் கையெழுத்திட மறுப்பதாகவும் குற்றம்சாட்டி, மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

மேலும், 1-வது வாா்டு உறுப்பினா் மைதிலி என்பவரின் கணவா் முருகானந்தன் ஊராட்சி மன்றக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது தன்னிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், தனக்கு சாதி ரீதியாக பிரச்னை தருவதாகவும் அவா் குற்றம் சாட்டினாா்.

தா்னாவில் ஈடுபட்ட பிரியாவிடம் ஒன்றிய ஆணையா் சரவணன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஊராட்சி நிதியை பெற துணைத் தலைவா் கையெழுத்திட மறுத்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், சாதி ரீதியாக தொல்லை அளிக்கப்படுவதற்கு போலீஸாரிடம் புகாா் அளித்து தீா்வு பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா். இதையடுத்து, தா்னாவை விலக்கிக் கொண்ட பிரியா, இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.