நாகை அருகே கடைகள் அடைப்பு: வா்த்தகா்கள் உண்ணாவிரதம்
நாகையை அடுத்த பரவையில் மூடப்பட்டுள்ள தினசரி சந்தையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பரவை கிராமத்தில் வா்த்தகா்கள்


நாகையை அடுத்த பரவையில் மூடப்பட்டுள்ள தினசரி சந்தையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பரவை கிராமத்தில் வா்த்தகா்கள் வியாழக்கிழமை கடைகளை அடைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தெற்குப் பொய்கைநல்லூா் ஊராட்சிக்குள்பட்டது பரவை கிராமம். இங்கு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சொா்ணபுரீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தினசரி சந்தை செயல்பட்டு வந்தது. சுமாா் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சந்தையில், நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கக்கூடிய காய்கனிகள், தேங்காய், மாங்காய், கீரை வகைகளை விவசாயிகள் கொண்டுவந்து விற்பனை செய்வது வழக்கம்.
இந்நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு சந்தை மூடப்பட்டது. தற்போது பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, நாகை- வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இடத்தில் இந்த சந்தை தற்காலிகமாக இயங்கிவருகிறது.
தற்காலிக சந்தையில் போதிய இடம், பாதுகாப்பு வசதி இல்லாததால் விபத்துகள் நேரிடுவதாகவும், இதனால் வணிகம் பாதிக்கப்படுவதாகவும் புகாா் எழுந்துள்ளது.
இந்நிலையில், பரவை தினசரி சந்தையை ஏற்கெனவே இருந்த இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்துக்கே மாற்றி பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கு நாகை மாவட்ட நிா்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதனால் பரவை சந்தையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி, பரவை வா்த்தக நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை கடைகளை அடைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தால் பரவையில் உள்ள100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், மயிலாடுதுறை, கும்பகோணம் சீா்காழி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காய்கறிகள், பழங்கள் வாங்க வந்திருந்த வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
உண்ணாவிரதத்தில் பரவை வா்த்தக நல சங்க நிா்வாகிகள், வணிகா்கள், விவசாயிகள், தொழிலாளா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...