கேரளம் அருகே டவ்-தே புயலில் சிக்கிய நாகை மீன்பிடி படகு: 5 மீனவர்கள் மாயம்

கேரள மாநிலத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற நாகை மீனவரின் விசைப்படகு சனிக்கிழமை டவ்-தே புயல் சீற்றத்தில் சிக்கி சேதமாகியுள்ளது.
கடல் சீற்றம்.
கடல் சீற்றம்.

கேரள மாநிலத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற நாகை மீனவரின் விசைப்படகு சனிக்கிழமை டவ்-தே புயல் சீற்றத்தில் சிக்கி சேதமாகியுள்ளது. இதில், அந்த மீன்பிடி படகில் இருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 5 பேர் மாயமாகியுள்ளனர்.

நாகையை அடுத்த சாமந்தான்பேட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்குச் சொந்தமான மீன்பிடி விசைப் படகில், அவரது தந்தை இடும்பன், சகோதரர் மணிவேல், நாகூர் பட்டினச்சேரியைச் சேர்ந்த இளஞ்செழியன், தினேஷ் உள்ளிட்டோர் கேரள மாநிலம், கொச்சியிலிருந்து கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக கடலுக்குச் சென்றுள்ளனர். ஏறத்தாழ 16 நாள்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் இருந்த அவர்கள், அரபிக் கடலில் டவ்-தே புயல் உருவாகுவது குறித்துக் கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில், கரை திரும்பும் நோக்கில் சனிக்கிழமை காலை கொச்சி துறைமுகத்தை நோக்கி படகை செலுத்தியுள்ளனர். 

கொச்சி கடற்கரையிலிருந்து சுமார் 14 நாட்டிக்கல் தொலைவில் அவர்கள் வந்து கொண்டிருந்த போது, அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள டவ்-தே புயல் சீற்றம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தில் நாகை மீனவர்களின் படகு சிக்கி, சேதமாகியுள்ளது. இதை, அருகில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த வேறு மீனவர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக அவர்கள், நாகை மீனவர்களுக்கு உதவி செய்ய சென்றுள்ளனர். அப்போது, நாகை விசைப் படகில் இருந்த மீனவர்கள், புயல் சீற்றத்தில் சிக்கி மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து, அந்த மீனவர்கள் நாகை மீனவர்களுக்குத் தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்த சாமந்தமான்பேட்டை மீனவர்கள் பெரும் துயரத்துக்கு உள்ளாகினர். மாயமான மீனவர்களின் குடும்பத்தினரும், அவரது உறவினர்களும் கண்ணீர் விட்டு கதறினர். பின்னர், மாயமான மீனவர்களை கண்டறிந்து கரை சேர்க்கக் கோரி சாமந்தான்பேட்டை மீனவர்கள், நாகை மீன்வளத் துறை அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இந்த விபத்தில், காணாமல் போன தங்கள் உறவினர்களின் பெயர், விவரம் மட்டுமே தங்களுக்குத் தெரிய வந்திருப்பதாகவும், மேலும் பலர் அந்தப் படகில் மீன்பிடிப்புக்குச் சென்று காணாமல் போயிருக்கலாம் எனவும் சாமந்தான்பேட்டை மீனவர்கள் தெரிவித்தனர். 

மேலும், மாயமான மீனவர்களை கண்டறிந்து மீட்க உடனடியாக ஹெலிகாப்டரை பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com