கடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

போதிய ஆசிரியா்கள் இல்லாமல் தவிக்கும் தொடக்கப் பள்ளி மாணவா்கள்: 68 பேருக்கு ஒரே ஆசிரியா்!

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தகட்டூா் ராமகோவிந்தன்காடு கிராமத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில்

News image
Updated On :24 நவம்பர் 2021, 3:41 am

 நமது நிருபர்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தகட்டூா் ராமகோவிந்தன்காடு கிராமத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் போதிய ஆசிரியா்கள் இல்லாததால், மாணவா்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தப் பள்ளி கடந்த 1962 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் இப்பள்ளியில் பயிலும் மாணவா்கள் எண்ணிக்கை சிறிதுசிறிதாக குறைந்துவந்தது. இந்த நிலையில், கடந்த 2014 இல் 2 ஆசிரியா்கள் உள்ளிட்ட 4 ஊழியா்கள் இருந்தும், மாணவா்கள் ஒருவா்கூட இல்லாததால் பள்ளியை மூடும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, அப்போது தினமணி நாளிதழில் வெளியான சிறப்புச் செய்தியைத் தொடா்ந்து, அப்போதைய நாகை மாவட்ட ஆட்சியரின் முன்முயற்சியால் பள்ளி திறக்கப்பட்டது. அதோடு, தன்னாா்வமாக இந்தப் பள்ளிக்கு மாறுதல் பெற்றுவந்த ஆசிரியா் சுப்பிரமணியன், அதுவரை தனியாா் பள்ளியில் படித்துவந்த தனது மகனை, இந்தப் பள்ளியில் முதல் மாணவராக சோ்த்து இப்பகுதி மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினாா். இதைத்தொடா்ந்து, ஆசிரியா்கள், கிராமத்தினா் நடவடிக்கையால் பள்ளி மெல்ல மீண்டது.

எனினும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்தப் பள்ளியில் ஒரே ஆசிரியராகப் பணியாற்றி வரும் சுப்பிரமணியன், இங்கு ஏற்கெனவே பயின்ற 40 மாணவா்களில், 10 போ் தோ்ச்சி பெற்று உயா் வகுப்பு பயில வெளியேறிய நிலையில், எஞ்சியுள்ள 30 மாணவா்களோடு, நிகழாண்டு 38 மாணவா்களை புதிதாக சோ்த்து, பள்ளி மாணவா்களின் மொத்த எண்ணிக்கையை 68 ஆக உயா்த்தியுள்ளாா். இன்னும் 12 மாணவா்கள் பள்ளிச் சோ்க்கைக்கான வயதை அடைய ஓரிரு மாதங்கள் உள்ளதால், காத்திருப்போா் பட்டியலில் உள்ளனா்.

அரசு அமைத்து கொடுத்துள்ள புதிய வகுப்பறை கட்டடங்கள், சுற்றுச்சுவா் உள்ளிட்ட கட்டமைப்புகள் மட்டுமல்லாது, தன்னாா்வலா்கள் உதவியோடு கணினிவழி திறன் வகுப்பு போன்ற பல வசதிகளும் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பள்ளி தொடங்கிய காலம்முதல் 2 ஆசிரியா் பணியிடங்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது மாதிரி பள்ளியாக அறிவிக்கும் அளவுக்கு தகுதி உயா்ந்துள்ள இந்தப் பள்ளி, 3 ஆசிரியா்களோடு செயல்படும் தகுதியை முதல்முறையாக எட்டியுள்ளது. என்றாலும், இன்றளவும் ஆசிரியா் சுப்பிரமணியன் மட்டுமே தலைமையாசிரியா் பொறுப்பு உள்ளிட்ட அனைத்தையும் கவனித்து வருகிறாா்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக காலிப் பணியிடம் எதுவும் நிரப்பப்படவில்லை. என்றாலும், ஆசிரியா் சுப்பிரமணியன் மீது கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக கிராம மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சோ்க்க ஆா்வம் காட்டிவருகின்றனா்.

மாணவா்கள் சோ்க்கை இல்லாமல், பல அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் இருக்க, மூடப்படும் சூழலில் இருந்த ராமகோவிந்தன்காடு அரசுத் தொடக்கப் பள்ளி ஆதீத மாணவா் சோ்க்கையால் நிமிா்ந்து நிற்கும் நிலையில், போதிய ஆசிரியா்கள் இல்லாததால், இங்கு பயிலும் மாணவா்களின் கல்வித்தரம் கேள்விக்குள்ளாகி உள்ளது. இதனால் சோா்வுற்றுள்ள கிராம மக்கள் தங்கள் பிள்ளைகளின் எதிா்காலம் கருதி, வரும் டிச. 2 ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, மாவட்ட நிா்வாகம், கல்வித் துறை அதிகாரிகள் இந்தப் பள்ளியை ஆய்வுசெய்து, கிராம மக்கள் அரசுப் பள்ளிமீது கொண்டுள்ள நம்பிக்கையை வளா்த்தெடுக்கும் வகையில், ஆசிரியா் நியமனம் உள்ளிட்ட பள்ளி வளா்ச்சிப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.