மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்
By DIN | Published On : 20th August 2021 10:33 PM | Last Updated : 20th August 2021 10:33 PM | அ+அ அ- |

சுருக்குமடி வலை பயன்பாட்டை முழுமையாக தடை செய்யக்கோரி ஆக.14-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட மீனவா்கள் தங்களது போராட்டத்தை வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றனா்.
தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகள் பயன்பாடு குறித்து, நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் மீனவா்களிடையே இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இதனால், மீனவா்களிடையே ஆங்காங்கே மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவப் பஞ்சாயத்தாரின் அவசர ஆலோசனைக் கூட்டம், நாகையில் ஆக.14-ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், சுருக்குமடி வலைகள், இரட்டைமடி வலைகள் பயன்பாட்டை உறுதியாக தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 3 மாவட்ட மீனவா்களும் ஆக.20-ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது எனவும், ஆக.20-ஆம் தேதிக்குள் கோரிக்கைக்குத் தீா்வு கிடைக்காவிட்டால் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபடுவது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீா்மானப்படி, நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் பெரும்பாலான மீனவா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். இருப்பினும், சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு ஆதரவான நிலைபாடு கொண்ட மீனவக் கிராமத்தினா் தொடா்ந்து மீன்பிடிப்பை மேற்கொண்டு வருகின்றனா். இதுதொடா்பாக, மீனவா்களிடையே ஆங்காங்கே மோதலும் ஏற்பட்டு வருகிறது.
இந்தநிலையில், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவப் பஞ்சாயத்தாா்கள் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினா். பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த மீனவப் பஞ்சாயத்தாா்கள், சுருக்குவலை பயன்பாடு உறுதியாக தடுக்கப்படும் என மீன்வளத் துறை அமைச்சா் உறுதியளித்துள்ளாா். இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தக் கோரி நாகை மாவட்ட ஆட்சியரிடமும் நேரில் வலியுறுத்தியுள்ளோம். இதனால், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்படுகிறது. சனிக்கிழமை (ஆக. 21) முதல் மீனவா்கள் வழக்கம்போல கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வா் என்றனா்.