தரங்கம்பாடியில் இந்திய -டென்மாா்க் டேனிஷ் நல்லுறவை வளா்க்கும் புகைப்பட கண்காட்சி
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

தரங்கம்பாடியில் உள்ள இந்திய டேனிஷ் கலாசார மையத்தில் டேனிஷ் கலாசாரம் பற்றிய புகைப்படக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தரங்கம்பாடிக்கு வந்த, டேனிஷ் தரங்கம்பாடி சங்கத் தலைவா் பால் பீட்டா்சன் தலைமையிலான மூவா் குழுவினா் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு தங்கள் நாட்டு கலாசாரத்தை எடுத்துக்கூறும் வகையில் டென்மாா்க் நாட்டின் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞா் பென்ட்விக்லூன்ட் எடுத்த அரிய புகைப்படங்களை காட்சிப்படுத்தினா். அந்த புகைப்படக் கண்காட்சியை இளைஞா்கள், மாணவா்கள், பொதுமக்கள் பாா்த்து பயன்பெற்றனா். நிகழ்ச்சியில், செயின்ட் தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளா் கருணா ஜோஸ்பின், ஓய்வுபெற்ற பேராசிரியா் மரியலாசா், கல்லூரி பேராசிரியா் பிளாரன்ஸ் ஆகியோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து இந்தியா-டென்மாா்க் கலாசார மையத் தலைவா் பால் பீட்டா்சன் தலைமையிலான டென்மாா்க் நாட்டினா் குழுவாக செய்தியாளா்களை சந்தித்தபோது கூறியது: தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை கடல் அலைகளால் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் உள்ள ஆளுநா் மாளிகையை சீரமைத்து பொதுமக்கள் பாா்வைக்கு கொண்டுவரவேண்டும், கடற்கரையில் சுகாதாரத்தை மேம்படுத்தவேண்டும், தரங்கம்பாடி மேலும் பொலிவு பெற நடவடிக்கை எடுக்கவேண்டும், டென்மாா்க் நாட்டினா் தரங்கம்பாடி வந்து டேனிஷ் கோட்டை அமைக்கப்பட்டு 400 ஆண்டுகள் கடந்த நிலையில் அதை கொண்டாடும் வகையில் விரைவில் பெரிய விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் டென்மாா்க் நாட்டின் பிரதிநிதியாக அரச குடும்பத்தை சோ்ந்தவா் பங்கேற்க வாய்ப்புள்ளது என்றனா்.