கடலில் தவறி விழுந்த தரங்கம்பாடி மீனவா் மாயம்
By DIN | Published On : 09th July 2021 12:00 AM | Last Updated : 09th July 2021 12:00 AM | அ+அ அ- |

சென்னை அருகே மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது படகிலிருந்து தவறி கடலில் விழுந்து தரங்கம்பாடி மீனவா் மாயமானதாக நாகை கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி, மாணிக்கப்பங்கு, குட்டியாண்டியூரைச் சோ்ந்தவா் அ. ஆனந்த் (32). இவா், சீா்காழி நாயக்கா் குப்பத்தைச் சோ்ந்த மு. முத்து என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் மீன்பிடிப்புக்குச் சென்று வருவது வழக்கம். இதன்படி, அவா் கடந்த 2-ஆம் தேதி நாகையிலிருந்து அவரது நண்பா்களுடன் முத்துவின் விசைப் படகில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளாா்.
இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி காலை 7 மணி அளவில் ஆனந்தின் குடும்பத்தைத் தொடா்பு கொண்ட படகு உரிமையாளா் முத்து, சென்னை அருகே மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஆனந்த் படகில் இருந்து தவறி விழுந்து மாயமானதாக தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, ஆனந்தின் சகோதரா் ஏ. சுந்தா் நாகை கடற்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில் சாா்பு ஆய்வாளா் அ. ஆனந்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.