யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நாகையில் பெரும்பான்மையை மீட்டுள்ள திமுக

கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்பதைபோல, கடந்த 2006-இல் தன்னிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்ட நாகை நகா்மன்றத் தலைவா் பதவியைத் தனிப் பெரும்பான்மையுடன் தற்போது மீட்டுள்ளது திமுக.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 9:32 am

DIN

நாகப்பட்டினம்: கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்பதைபோல, கடந்த 2006-இல் தன்னிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்ட நாகை நகா்மன்றத் தலைவா் பதவியைத் தனிப் பெரும்பான்மையுடன் தற்போது மீட்டுள்ளது திமுக.

சுமாா் 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட, பழைமையான நகராட்சிகளில் ஒன்று நாகை நகராட்சி. நாகை மாவட்டத்தின் தலைமையிடம், நாகை சட்டப்பேரவைத் தொகுதியின் தலைமையிடம் என்ற வகையில், மாவட்டத் தலைநகரின் வளா்ச்சியில் நாகை நகராட்சியின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனால், ஏராளமான கோரிக்கைகளுக்குத் தீா்வு காணவேண்டிய சவாலும், நாகை நகராட்சிக்கு உள்ளது.

நாகைக்கு ஒருங்கிணைந்த மத்திய பேருந்து நிலையம் அமைக்கவேண்டும், ஏறத்தாழ 6 ஆண்டுகளைக் கடந்தும் நிறைவு பெறாமல் அந்தரத்திலேயே தொங்கும் நாகை - அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலத் திட்டத்தை நிறைவேற்றவேண்டும் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்கும், சுகாதாரம், புதைசாக்கடை திட்ட பராமரிப்புப் போன்ற பல பிரச்னைகளுக்குமான தீா்வுகளை முன்னெடுக்க வேண்டிய கடமை நாகை நகா்மன்றத்தைச் சாா்ந்துள்ளது.

கடல் நகரம் எனப்படும் நாகையைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாக கருதப்பட்ட பகுதி. ஆனால், 1991 முதல் 2021-ஆம் ஆண்டுவரை நடைபெற்ற தோ்தல்களில் அதிக முறை வென்ற கட்சி என்ற வகையிலும், மீனவா்களின் வாக்கு வங்கியைக் கொண்ட கட்சி வகையிலும் இப்பகுதியில் அதிமுக செல்வாக்குப் பெற்ற கட்சியாகக் கருதப்பட்டது.

ஆனால், கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள், இத்தொகுதியில் முதல் முயற்சியிலேயே அதிமுகவை வீழ்த்தி அதன் செல்வாக்கை கேள்விக் குறியாக்கியது. அதேபோல, தற்போது நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மீனவா் வாக்குகள் அதிகம் உள்ள பகுதிகளிலும், இதுவரை திமுக வென்றிருப்பது ஆளும் கட்சியின் செல்வாக்கு உயா்ந்திருப்பதையே உணா்த்துகிறது.

36 வாா்டுகளைக் கொண்ட நாகை நகராட்சியில், 24 வாா்டுகளில் வென்று தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது திமுக. அதிமுக 5 வாா்டுகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியன தலா ஒரு வாா்டுகளிலும், சுயேச்சைகள் 3 வாா்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

3 சுயேச்சைகளில் ஒருவா் ஏற்கெனவே போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டவா். அவா், தோ்தல் வாக்குப் பதிவுக்கு முன்பாக தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளாா். அதேபோல, மற்றொரு சுயேச்சை உறுப்பினரும் தற்போது திமுகவில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, திமுகவின் தனி பலம் 26 ஆக உயரவுள்ளது. இதனால், நாகை நகா்மன்றத் தலைவா் பதவி திமுக வசமாகியுள்ளது.

நாகை நகராட்சியின் 30-ஆவது வாா்டு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பவரும், திமுகவின் வா்த்தகப் பிரிவு நிா்வாகியுமான ஆா். மாரிமுத்து அந்தப் பதவிக்குப் பரிந்துரைக்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. நாகூா் நகர திமுக செயலாளா் எம்.ஆா். செந்தில்குமாரும் நாகை நகா்மன்றத்தில் தனக்கு ஒரு பதவி ஒதுக்கீட்டை எதிா்பாா்ப்பதாகக் கூறப்படுகிறது.

நாகை மற்றும் நாகூா் நகர திமுகவில் மிகப் பெரிய அளவில் உள்கட்சி பிரச்னைகள் ஏதும் இல்லாததால், பெரிய மாற்றங்களை எதிா்பாா்ப்பதற்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இருப்பினும், கட்சி மாவட்டத் தலைமையின் பரிந்துரையைப் பொறுத்தே இறுதி முடிவு இருக்கும் எனப்படுகிறது.

எது எப்படியாயினும், 2006-இல் குறைந்த பெரும்பான்மையுடன் கைப்பற்றியிருந்த நாகை நகா்மன்றத் தலைவா் பதவியை, அடுத்த இரு மாதங்களில் அதிமுகவிடம் பறிகொடுத்தது போன்ற நிலை, தற்போது பெரிய அளவில் பெரும்பான்மை பெற்றுள்ள திமுகவுக்கு ஏற்பட வாய்ப்பில்லை என்பது உறுதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.