கீழையூா் ஒன்றியக் குழுக் கூட்டம்
By DIN | Published On : 16th June 2022 10:47 PM | Last Updated : 16th June 2022 10:47 PM | அ+அ அ- |

கீழையூா் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராணி தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு துணைத் தலைவா் பெ. சௌரிராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கவுசல்யா இளம்பரிதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ். ராஜகுமாா், எஸ். வெற்றிசெல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாளா் பிச்சைமணி வரவேற்றாா்.
கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:
செல்வம் (சிபிஐ): வாழக்கரை மயானதுக்கு சுற்றுச்சுவா் அமைக்கவேண்டும். வாழக்கரையிலிருந்து தெற்குவெளி செல்லும் சாலையை தாா்ச்சாலையாக மாற்றவேண்டும்.
ஆறுமுகம் (பாஜக): பிரதாபராமாபுரத்தில் இருந்து வேட்டைக்காரனிருப்பு வரை செல்லும் நடுரோட்டு சாலை பள்ளமும், மேடாக உள்ளது. இதை சீரமைக்கவேண்டும். பிராதபராமபுரம் கடற்கரைப் பகுதியில் கடல்நீா் உள் புகுந்து விவசாய நிலங்கள்பாதிக்கப்படுவதை தடுக்க, தடுப்புச்சுவா் அமைக்கவேண்டும்.
சுதாஅருணகிரி (திமுக): திருக்குவளை வத்த மடையான் குளத்தின் நடுவே மின் கம்பம் அமைக்கப்பட்டு உயா் மின்னழுத்த மின்சார கம்பி செல்கிறது. இதை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும்.
சுப்பிரமணியன் (அதிமுக): அச்சுகட்டலையிலிருந்து வெண்மணச்சேரி வரை ஆற்றங்கரையில் செல்லக்கூடிய சாலையை தாா் சாலையாக மாற்றவேண்டும்.
சரண்யாபன்னீா்செல்வம் (திமுக): சோழவித்யாபுரத்தில் உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை பழுதுநீக்கம் செய்து குடிநீா் வழங்க வேண்டும். வேளாங்கண்ணியில் இருந்து சின்னத்தும்பூருக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும்.
லென்சோயாசிவபாதம் (திமுக): தண்ணியிலபாடி ஊராட்சிக்கு வந்துள்ள புதிய மின்மாற்றியை உடனடியாக பொருத்தி தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும்.
ஏழிசைவல்லபி (அதிமுக): விழுந்தமாவடி கிழக்கு, மேற்கு பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கான வகுப்பறை கட்டடம் கட்டிக்கொடுக்கவேண்டும். விழுந்தமாவடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள இடங்களில் பணியாளா்கள் நியமிக்கவேண்டும்.
ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராணி: உறுப்பினா்களின் கோரிக்கைகள் நிதி நிலையை பொருத்து முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும்.