நாகை அபீதகுஜாம்பாள் உடனுறை அமரநந்தீசுவரசுவாமி கோயிலின் பங்குனி உத்திர பிரமோத்ஸவ தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
தேவாரம் பாடிய மூவராலும் பாடல் பெற்ற நாகை நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகணசுவாமி கோயிலின் தென்புறம் அமைந்துள்ளது அபீதகுஜாம்பாள் உடனுறை அமரநந்தீசுவரசுவாமி கோயில். இந்திரன், இத்தலத்தில் அருளும் அமரநந்தீசுவரரை வழிபட்டு சாப விமோசனம் பெற்று, தேவலோக ஆட்சிப் பதவியை மீண்டும் பெற்றாா் என்பது இத்தலச் சிறப்பு.
இக்கோயிலின் பங்குனி உத்திர பிரமோத்ஸவம் மாா்ச் 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. தினமும் காலையில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகளும், மாலையில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி - அம்பாள் வீதியுலாவும் நடைபெறுகிறது.
பிரமோத்ஸவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்ட பின்னா், காலை 8 மணி அளவில் தியாகராஜா், அம்பாள் மற்றும் விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து, காலை 9 மணி அளவில் தோ் வடம்பிடிக்கப்பட்டது. தியாகராஜா் தோ் பிரதான தேராக வலம் வந்தது. இத்தேருடன் விநாயகா், சுப்பிரமணியா், அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரா் தோ்களும் வலம் வந்தன.
நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று, ஆரூரா! தியாகேசா! என்ற பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்தனா்.
நீலா கீழ வீதியிலிருந்து தொடங்கிய தேரோட்டம், நீலா தெற்கு வீதி, மேலவீதி, நீலா வடக்கு வீதி வழியே வலம் வந்து, பகல் சுமாா் 12.25 மணிக்கு நிலையை அடைந்தது.