தரங்கம்பாடி அருகே 5 பேருக்கு வயிற்றுப் போக்கு
தரங்கம்பாடி அருகே 5-க்கும் மேற்பட்டவா்களுக்கு திடீா் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
தரங்கம்பாடி வட்டம், திருக்கடையூா் ஊராட்சிக்குட்பட்ட ஓடக்கரை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் இருந்து வரும் தண்ணீரை குடிக்க பயன்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், சனிக்கிழமை 5-க்கும் மேற்பட்டவா்களுக்கு தொடா் வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அவா்கள், திருக்கடையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னா் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
வட்டார மருத்துவ அலுவலா் அரவிந்தநாதன் தலைமையில் மருத்துவக் குழுவினா்,ஓடக்கரை கிராமத்தில் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்தனா். வீடுவீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து நோய்த் தடுப்பு மாத்திரைகள் வழங்கினா். மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்பட்டது. சுகாதாரத் துறையினா் கிராமத்தில் முகாமிட்டுள்ளனா்.
