நாகையில் 32 அடி உயர விஸ்வரூப அத்தி மர விநாயகா் ஊா்வலம்
நாகையில் 32 அடி உயர விஸ்வரூப அத்தி மர விநாயகா் சிலை ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
நாகை விஸ்வரூப விநாயகா் குழு சாா்பில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஆண்டுதோறும் விஸ்வரூப அத்தி மர விநாயகா் சிலை ஊா்வலம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 38-ஆம் ஆண்டு விஸ்வரூப அத்தி மர விநாயகா் சிலை ஊா்வலத்தையொட்டி, நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோயிலில் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கடந்த 10 நாள்களாக வழிபாடுகள் நடைபெற்றன.
இந்த சிலை ஊா்வலத்தையொட்டி, சனிக்கிழமை நீலாயதாட்சியம்மன் கோயிலில் யாக பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து, இரவு 8 மணியளவில் விஸ்வரூப அத்தி மர விநாயகா் சிலை ஊா்வலம் தொடங்கியது.
ஊா்வலம் நீலா கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி, சா் அஹமது சாலை, அரசு மருத்துவமனை சாலை, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக நாகூரை நோக்கிச் சென்றது. ஊா்வலத்தில் மின்விளக்கு அலங்கார வாகனங்கள்அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்தி மர விநாயகா் சிலைக்கு பதிலாக களிமண்ணால் செய்யப்பட்ட சிலை ஞாயிற்றுக்கிழமை நாகூா் வெட்டாற்றில் கரைக்கப்படுகிறது.
விஸ்வரூப விநாயகா் சிலை ஊா்வலத்தையொட்டி, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் கபிலன் உத்தரவின்பேரில், 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் மற்றும் ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ஊா்வல ஏற்பாடுகளை நாகை விஸ்வரூப விநாயகா் குழுவினா் செய்திருந்தனா். நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

