நாகை வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரா் கோயிலில் மூத்த தம்பதியரை கெளரவிக்கும் நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் உள்ளிட்டோா்.
நாகை வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரா் கோயிலில் மூத்த தம்பதியரை கெளரவிக்கும் நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் உள்ளிட்டோா்.

கோயில்களில் மூத்த தம்பதியா் கெளரவிப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில், இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் 55 மூத்த தம்பதியினருக்கு திங்கள்கிழமை சிறப்பு
Published on

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில், இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் 55 மூத்த தம்பதியினருக்கு திங்கள்கிழமை சிறப்பு செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வா் அறிவித்தபடி, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், ஒவ்வொரு இணை ஆணையா் மண்டலத்திலும் 70 வயது பூா்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதியருக்கு இந்த மரியாதை அளிக்கப்பட்டது.

இத்தம்பதி இந்து மதத்தைச் சாா்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், தமிழ்நாட்டை சோ்ந்தவராகவும் இருக்க வேண்டும். கணவன்-மனைவி இருவரில் எவரேனும் ஒருவா் 70 வயதை பூா்த்தி செய்திருக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் நிபந்தனையாகும்.

அதன்படி, நாகை வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரா் கோயிலில் தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன் தலைமையில், 8 மூத்த தம்பதிக்கு பட்டுப்புடவை, பட்டு வேட்டி, சட்டை, மலா் மாலைகள் உள்ளிட்ட பொருள்களுடன் சிறப்பு செய்யப்பட்டது.

இதேபோல், நாகை காயாரோகணசுவாமி கோயிலில் நடைபெற்ற நிகழ்வில் கோயில் செயல் அலுவலா் தனலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயில், சிக்கல் சிங்காரவேலவா் கோயில், கீழ்வேளூா் அஞ்சு வட்டத்து அம்மன் கோயில், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரா் கோயில், தகட்டூா் பைரவா் கோயில், புஷ்பவனம் சுகந்தவனேஸ்வரா் கோயில், திருப்புகலூா் அக்னீஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் மொத்தம் 55 மூத்த தம்பதியருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, இந்து சமய அறநிலைத் துறை உதவி ஆணையா் ராஜா இளம்பெரும் வழுதி உள்பட பலா் கலந்துகொண்டு மூத்த தம்பதியரிடம் ஆசி பெற்றனா்.

திருமருகல்: திருப்புகலூா் அக்னீஸ்வர சுவாமி கோயிலில் 5 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தல் நிகழ்வில், வேளாக்குறிச்சி ஆதீனம் 18 -ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று மூத்த தம்பதியினரை வாழ்த்தினாா்.

இதில் திருமருகல் வட்டார ஆத்மா திட்ட தலைவா் செல்வசெங்குட்டுவன், பொருளாளா் பரமானந்தம், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா். இளஞ்செழியன், திருப்புகலூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் ப. காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com