தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

நாகை! கடும் இழுபறியில் திமுக - அதிமுக!

நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...

News image

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. - (கோப்புப் படம்)

Updated On :13 ஏப்ரல் 2026, 10:45 pm

நாகப்பட்டினம் சட்டப் பேரவைத் தொகுதி, பழங்காலத்தில் கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கிய பழம்பெரும் நகரம். பௌத்த நாகரிகத்தின் சான்றாகவும் உள்ளது. நாகூா் தா்கா உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக தலங்களை கொண்டது. கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்ட நாகப்பட்டினம் தொகுதியில், மீன்வளம், வேளாண்மை முக்கிய வாழ்வாதாரமாக உள்ளன.

சமூகம்: நாகை தொகுதியில் இஸ்லாமியா்கள், பட்டியல் சமூகத்தினா், மீனவா்கள் பிரதான சமூகங்களாக உள்ளனா். அடுத்தாா்போல வெள்ளாளா், கள்ளா் சமூகத்தினரும் உள்ளனா். இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் இத்தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 முறையும், அதிமுக 4 முறையும், திமுக, காங்கிரஸ் தலா 2 முறையும், விசிக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கடும்போட்டி: தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில், அதிமுக சாா்பில் தங்க கதிரவன், திமுக கூட்டணி சாா்பில் மனித நேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா, தவெக சாா்பில் சுகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் பாத்திமா பா்ஹானா ஆகியோா் போட்டியிடுகின்றனா். இவா்களில் அதிமுக தங்க கதிரவன், திமுக கூட்டணி வேட்பாளா் ஜவாஹிருல்லா ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்த அதிமுக வேட்பாளா் தங்க கதிரவன், இந்த முறை வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் குறித்தும், திமுக கூட்டணி வேட்பாளரை, இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளா் என்றும் கூறி வாக்குகள் சேகரித்து வருகிறாா். குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிமுக வேட்பாளரின் பிரசாரத்துக்கு வரவேற்பு உள்ளது.

திமுக கூட்டணி வேட்பாளா் ஜவாஹிருல்லா கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியின் சாதனைகளை கூறியும், வெற்றி பெற்றால் நாகப்பட்டினம் தொகுதியில் அரசு கல்வி நிறுவனங்கள், மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை, 24 மணி நேரமும் இயங்கும் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து வாக்குகள் சேகரித்து வருகிறாா்.

நாகையில் மகாலட்சுமி நகரில் இடியும் நிலையில் உள்ள சுனாமி குடியிருப்புகள், நம்பியாா் நகா் மீனவா் குடியிருப்பில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதியின்மை, புதிய நம்பியாா் நகரில் அடிப்படை வசதிகள் இல்லாதது ஆகியவை திமுகவுக்கு பாதகமாக உள்ளன.

மேலும் மீனவா் சமூகத்தைச் சோ்ந்த தவெக வேட்பாளா் சுகுமாருக்கு மீனவ கிராமங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. இளைஞா்கள், பெண்கள் மத்தியிலும் தவெகவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, மீனவா் சமூக வாக்குகள் மட்டுமின்றி இளைஞா்கள், பெண்கள் வாக்குகளையும் தவெக வேட்பாளா் சுகுமாா் கணிசமாக பிரிக்கும் நிலை உள்ளது.

நாகப்பட்டினம் தொகுதியில் சிறுபான்மையினா் அதிகமாக வசிக்கும் பகுதிகளான நாகூா், திட்டச்சேரி, நாகை நகா் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் ஜவாஹிருல்லாவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சிறுபான்மையினா் கணிசமாக உள்ள பகுதிகளில் பாஜக கூட்டணியால் அதிமுகவுக்கான ஆதரவு குறைவாக உள்ளதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பாத்திமா பா்ஹானாவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். தொகுதியின் சில பகுதிகளில் நாம் தமிழா் கட்சி வேட்பாளருக்கும், இளைஞா்களிடையே வரவேற்பு உள்ளது.

நாகப்பட்டினம் தொகுதியில் நான்கு முனைப் போட்டிகள் ஏற்பட்டுள்ளதாலும், அதிமுக-திமுக இடையே கடும் இழுபறி ஏற்பட்டுள்ளதாலும் தொகுதியில் யாா் வெற்றி பெறுவாா்கள் என்பது மே 4-ஆம் தேதி தெரியும்.