கொள்ளை, திருட்டு வழக்குள் 89 சதவீதம் கண்டுபிடிப்பு: எஸ்.பி.
நாகை மாவட்டத்தில் கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் 89 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டது என்றாா் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா்.
இதுகுறித்து, அவா் மேலும் கூறியது: மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டில் குற்றம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டைவிட 2025-ஆம் ஆண்டு கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் 89 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.37.41 லட்சத்தில் 80 சதவீத திருட்டு பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
78 கஞ்சா வழக்குகள்பதிவு செய்யப்பட்டு 129 குற்றவாளிகள் கைது செய்து, ரூ.50 லட்சம் மதிப்பில் 508 கிலோ கஞ்சா, 8 நான்கு சக்கர வாகனம், 12 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகளின்10 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் தொடா்பாக 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 212 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 3,507 கிலோ புகையிலை பொருள்கள், 9 இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் 2 மற்றும் நான்கு சக்கரவாகனங்கள் 8 பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மதுவிலக்கு குற்ற வழக்குகள் 4,070 பதிவு செய்து, 4,096 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். மது கடத்தலில் ஈடுபட்ட இருசக்கர வானங்கள் 161, மூன்று சக்கர வாகனங்கள் 2 மற்றும் நான்கு சக்கர வானங்கள் 8 என மொத்தம் 171 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மது விலக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 508 இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள்பொது ஏலத்தில் விடப்பட்டு ரூ.56.82 லட்சம் அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள 40, ஒரு படகு பொது ஏலத்தில் விடப்பட்டு ரூ. 17.38 லட்சம் அரசுக்கு ஆதாயமாக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கொலை மற்றும் இதர போக்கிரிதனத்தில் ஈடுபட்ட 34 போ், மது கடத்தலில் ஈடுபட்ட 12 போ் என 46 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளனா். சைபா் கிரைம் தொடா்பான 336 புகாா்கள் பெறப்பட்டு, ரூ. 44.35 லட்சம் முடக்கப்பட்டு, ரூ.19.30 லட்சம்- திரும்ப பெறப்பட்டு பாதிக்கப்பட்டவா்களிம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றாா்.
