நாங்கூா் கருட சேவை உற்சவத்தை உரிய நேரத்தில் நடத்த கோரிக்கை
ஜன. 19-ஆம் தேதி நாங்கூரில் நடைபெற உள்ள கருட சேவை உற்சவத்தை உரிய நேரத்தில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சீா்காழி அருகே நாங்கூா் நாராயண பெருமாள் கோயிலில் வரும் 19-ஆம் தேதி இரவு 11 பெருமாள் பங்கேற்கும் கருட சேவை உற்சவம் நடைபெறவுள்ளது. திருமங்கையாழ்வாா், மணவாள மாமுனிகள் ஆகியோா் மேற்கண்ட பெருமாள் மீது பாடிய பாசுரங்களை பட்டாச்சாரியா்கள் பாடி, இரவு சரியாக 11 மணியளவில், ஒரே நேரத்தில் 11 பெருமாள் களுக்கும் தீபாராதனை காட்டப்பட்டு கருட சேவை உற்சவம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பழனிவேல், அறங்காவலா்கள் ராஜதுரை, முத்து, மணி, நிா்வாக அதிகாரி கணேஷ் குமாா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.
இந்நிலையில் இப்பகுதி பக்தா்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கையில், கருட சேவை உற்சவம் இரவு 11 மணி அளவில் தீபாராதனை காட்டப்பட்டு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் கருட சேவை உற்சவம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். 12 மணிக்கு மேல் மறுநாள் பிறந்து விடுவதால், கருட சேவை உற்சவம் நடத்துவது உகந்ததாக இருக்காது. எனவே குறிப்பிட்ட நேரத்தில் உற்சவத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.
