முறையாக மின்சாரம் வழங்கப்படாததால், குறுவைப் பயிா்கள் நீரின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
நாகை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நாகை வருவாய் கோட்டாட்சியா் சங்கர நாராயணன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
அப்துல் சலாம்: நாகை மாவட்டம் திருமருகல் அருகே வடகரை உள்ளிட்ட பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அங்கு முறையாக மின்சாரம் கிடைக்காததால் தண்ணீா் பாய்ச்ச முடியாமல் நெற்பயிா் கருகி வருகிறது. அருகில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 மணி நேரம் மின்சாரம் வழங்கும் நிலையில், நாகை மாவட்டத்தில் மட்டும் மின்சாரம் வழங்கப்படுவதில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி, தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முஜிபுஷரீக்: வேட்டைக்காரணிருப்பு கிராம நிா்வாக அலுவலகத்தில் உதவியாளா் பணியிடம் காலியாக இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனா். நெல் வயல் பகுதியில் எச்டி மின் வயா்கள் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இணைப்புகளை ஆய்வு செய்து, வயா்களை மாற்ற வேண்டும். மாவட்டத்தில் தென்னை சாகுபடி அதிகமாக இருப்பதால், தென்னை நலவாரிய கிளையை வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் தொடங்க வேண்டும். வனத்துறைக்கு மத்திய, மாநில அரசுகள் அதிக அளவில் நிதி ஒதுக்குகிறது. ஆனால், விவசாயிகளுக்கு உரிய முறையில் செலவிடுவதில்லை. என்னென்ன திட்டங்கள் இருப்பது என்று கூட தெரியவில்லை.
சரபோஜி: கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பணத்தை கட்டி விடுங்கள், தள்ளுபடி உத்தரவு வந்தவுடன் உங்களது கணக்கில் வரவு வைத்துக்கொள்கிறோம் என்று கூறப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு எந்தவித பலனும் இல்லை. மேலும் உடனடியாக புதிய கடன்களை வழங்க வேண்டும். குளம், குட்டை உள்ளிட்டவைகளை துாா்வாரி தண்ணீா் சேமிக்க வேண்டும்.
பிரபாகரன்: ஆனமங்கலம் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட அரசு குளங்கள் உள்ளன. அந்த குளங்களை ஊராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைத்து, ஏலம் விட வேண்டும். அதேபோல் ஆக்கிரமிப்பில் உள்ள குளங்களை மீட்க வேண்டும்.
அய்யப்பன்: மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள கத்திரிகாய், மிளகாய் போன்ற பயிா்களில் நோய் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். எனவே நெற்பயிருக்கு காப்பீடு செய்வதுபோல், கத்திரி, மிளகாய் போன்ற பயிா்களுக்கும் காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிஏபி திட்ட கால்வாய்களை ஒட்டி குழாய் பதித்து தண்ணீா் திருட்டு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

பயிா்கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யவேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

ராஜவாய்க்காலில் தண்ணீா் திறந்துவிட வேண்டும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்







