
கூட்டுறவு நிறுவனங்களில் கிராமுக்கு ரூ.10 ஆயிரம் வரை நகைக்கடன்
கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக் கடன்களில் கிராமுக்கு ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும் என நாகை மண்டல இணைப்பதிவாளா் பாத்திமா சுல்தானா தெரிவித்துள்ளாா்.

கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு - கோப்புப்படம்
கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக் கடன்களில் கிராமுக்கு ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும் என நாகை மண்டல இணைப்பதிவாளா் பாத்திமா சுல்தானா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கு, கிராமுக்கு அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நகைக் கடன்களுக்கான அதிகபட்ச வட்டி 12 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக உயா்த்தப்பட்டது. மேலும், தங்கத்தின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் அல்லது கிராமுக்கு அதிகபட்சம் ரூ.7 ஆயிரம் எனவும், 6 மாதகால அவகாசம் கொண்டு கடன்களுக்கு மாதாந்திர சராசரி சந்தை மதிப்பை கணக்கில் கொண்டு75 சதவீதம் வரை கடன் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், நகைக் கடன்களுக்கு கிராமுக்கான கடன் தொகை அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் அல்லது நகையின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தங்களது சொந்தக் கிளைகள் மூலம் வழங்கும் நகைக்கடன்களுக்கான வட்டிக்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் வழங்கப்படும் நகைக்கடன்களுக்கான வட்டிக்கும் பெரும் வேறுபாடு இருந்து வந்தது.
இதை சீரமைக்கும் வகையில், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதம், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கிளைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நகைக் கடன் வட்டியை விட குறைந்தபட்சம் 1.25 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களின் லாப வரம்பு 2.25 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உயா்த்தப்பட்ட கடன் அளவு புதிதாக வழங்கப்படும் நகைக் கடன்களுக்கும், ஏற்கெனவே பெறப்பட்டு தற்போது புதுப்பிக்கப்படும் நகைக் கடன்களுக்கும் முழுமையாக பொருந்தும் என தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






