மன்னர்களின் அரசாட்சி முறை மட்டுமன்றி பழங்கால மக்களின் சமூக பிரச்னைகள், பொருளாதார நிலைகள், வாழ்க்கை முறை ஆகியவற்றை அறிந்துகொள்ள கல்வெட்டுகள் உதவுகின்றன என தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை முன்னாள் தலைவர் எ. சுப்பராயலு கூறினார்.
திருவாரூரில் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கல்வெட்டியல் பிரிவும், நேதாஜி கல்விக் குழுமமும் இணைந்து கல்வெட்டுகளின் புகைப்படக் கண்காட்சியை புதன்கிழமை நடத்தின.
நிகழ்ச்சிக்கு, நேதாஜி கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ். வெங்கட்ராஜலு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை முன்னாள் தலைவர் எ. சுப்பராயலு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசியது:
1,600 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றி அறிய கல்வெட்டுகள் உதவுகின்றன. பொதுவாக கோயில்களுக்கு நிலம், பொருளுதவி செய்தவர்கள், இந்த தானத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகவே கோயில்களில் கல்வெட்டுகள் எழுதப்பட்டன. மேலும் இவைகளில் சமூக, பொருளாதார நிலைகள் பற்றியும் எழுதப்பட்டன. இதன்மூலம் இந்த கல்வெட்டுகள் வரலாற்று ஆவணமாக மாறிவிட்டன. மன்னர்களின் அரசாட்சி முறை மட்டுமன்றி பழங்கால மக்களின் சமூக பிரச்னைகள், பொருளாதார நிலைகள் ஆகியவற்றையும் இந்த கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.
கல்வெட்டுகளின் வார்த்தைகளைப் பாடங்களில் படிப்பதைவிட அந்த கல்வெட்டுகளிலேயே படிக்கும்போது, பழங்கால மக்களிடையே உறவாடுவது போன்ற உணர்வு ஏற்படும். மேலும், சில பிரச்னைகளுக்கு அவர்கள் எவ்வாறு தீர்வு கண்டனர் என்பதையும் அறிய முடியும்.
1200-1300 களில் நிலமானிய முறை வளர்ந்து கொண்டிருந்தது. அதற்கு முன்பு உழுபவர்கள் வேறு, லாபத்தை அனுபவிப்பவர்கள் வேறு என்ற நிலை இருந்தது. பின்னர் நில உரிமையாளர்களுக்கும், உழுகுடிகளுக்கும் பிரச்னை தோன்ற ஆரம்பித்தது. இதனால் நில உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து உழுகுடிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த தகவல்களை திருக்கோவிலூர், மன்னார்குடி கோயில்களில் உள்ள கல்வெட்டுகளில் அறிந்துகொள்ள முடிகிறது. வரலாற்று மாணவ, மாணவியர் மட்டுமன்றி அனைத்து மாணவர்களும் கல்வெட்டுகளைப் படிக்க ஆர்வம் காட்ட வேண்டும் என்றார் சுப்பராயலு.
பின்னர், நேதாஜி கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளின் புகைப்படக் கண்காட்சியை அவர் தொடங்கி வைத்தார். மன்னர் மகேந்திரவர்மரால் செங்கல், மரம், உலோகம் மற்றும் மண்சுதை இல்லாமல் பிரம்மா, விஷ்ணு, சிவனுக்கு ஒரே பாறையில் எழுதப்பட்ட கோயில் பற்றி விழுப்புரம் மாவட்டம், மண்டகப்பட்டில் உள்ள கல்வெட்டில் அறிய முடிகிறது. இதேபோல், பல்வேறு இடங்களில் கிடைத்த கல்வெட்டுகளின் எழுத்துகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில், ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பின் தலைவர் கனகராஜன், வேலுடையார் கல்விக் குழுமத்தின் தலைவர் தியாகபாரி, ஜிஆர்எம் கல்விக் குழுமங்களின் தலைவர் வடுகநாதன், கல்வெட்டியல் பிரிவு இயக்குநர் க. பன்னீர்செல்வம், நேதாஜி கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் ஆர். அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.